ரூ.1600 கோடி மதிப்புடைய சசிகலா சொத்துகள் முடக்கம்.. பினாமி ஒழிப்பு சட்டத்தில் நடவடிக்கை..
சசிகலாவுக்கு சொந்தமான ரூ.1600 கோடி மதிப்புடைய சொத்துகளை பினாமி ஒழிப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித் துறையினர் முடக்கி வைத்துள்ளனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா நடராஜன், அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் தண்டனை பெற்று கடந்த 2017ம் ஆண்டு முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, 2017ம் ஆண்டு நவம்பரில் சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தினர். சென்னை, புதுச்சேரி, கோவை உள்ளிட்ட நகரங்களில் 37 இடங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. சுமார் 1800 அதிகாரிகள் இந்த ரெய்டுகளை நடத்தினர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி, பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். அதன்பிறகு, அப்படி மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1000, ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தி ஏராளமான சொத்துகள் சசிகலாவின் பினாமி பெயர்களில் வாங்கப்பட்டிருக்கிறது. இதை ரெய்டுகளில் வருமானவரித் துறையினர் கண்டுபிடித்தனர். மேலும், சசிகலா குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களின் 150 இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகளில் பல பினாமிச் சொத்துக்களுக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, வருமானவரித் துறையில் பினாமி ஒழிப்பு பிரிவு, சசிகலாவின் பினாமி சொத்துகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர். இதில், டிரைவர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களில் பெரிய சொத்துக்கள் வாங்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, பினாமி பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டப் பிரிவு 24(3)-ன் கீழ் ரூ.1600 கோடி மதிப்புடைய சசிகலாவின் சொத்துகளை முடக்கி வைத்து வருமானவரித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள ஷாப்பிங் மால், புதுச்சேரி ஸ்ரீலட்சுமி ஜுவல்லரி மற்றும் கோவையில் உள்ள செந்தில் பேப்பர்ஸ் அன்ட் போர்டு கம்பெனி பெயரிலான ரிசார்ட் ஆகியவை உள்ளிட்ட சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன.
வருமான வரித் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.