அயோத்தி வழக்கில் தீர்ப்பு.. பாஜகவினருக்கு தடை..

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதற்கு பாஜகவினருக்கு கட்சி மேலிடம் தடை விதித்துள்ளது.

சர்ச்சைக்குரிய அயோத்தி நில உரிமை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான இந்த அமர்வு, வழக்கில் தொடர்ச்சியாக 40 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடத்தியது. வரும் 17ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் ஓய்வு பெறவிருக்கிறார். எனவே, அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அயோத்தி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகள் எதையும் பாஜகவினர் தெரிவிக்கக் கூடாது என்று அக்கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும், கட்சியின் சமூக ஊடகப் பிரிவுகள் தேவையற்ற கருத்துகளை வெளியிடக் கூடாது என்று சமூக ஊடகப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா எச்சரித்திருக்கிறார்.

இதே போல், ஆர்.எஸ்.எஸ். தலைமையும் அந்த அமைப்பினருக்கு தடை விதித்திருக்கிறது. சமீபத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில், அதன் தொண்டர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கில் சாதகமாக தீர்ப்பு வெளி வந்தாலும் அது தொடர்பாக தேவையற்ற கருத்துக்களை கூறக் கூடாது என்று எச்சரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

More News >>