கலாம் விருது பெயரை மாற்றிய ஜெகன்மோகன் எதிர்ப்புக்கு பணிந்தார்..

பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் அப்துல் கலாம் விருதுகளை, ஒய்.எஸ்.ஆர். விருதுகள் என்று ஆந்திர அரசு மாற்றியது. இதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பவே, ஜெகன்மோகன் அதை வாபஸ் பெற்றார்.

ஆந்திராவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரானார். சந்திரபாபுநாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் பெரும் தோல்வியடைந்தது. பெரிய வெற்றியை ஈட்டி, ஆட்சியைப் பிடித்ததால் ஜெகன் அரசு தற்போது எல்லா விஷயத்திலும் அதிகாரத் தோரணையை காட்டி வருகிறது. பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினாலும், ஜெகன் அரசு மிகவும் அகங்காரத்துடன் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஆந்திராவில் படிப்பில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள், கல்வி நாளாக கொண்டாடப்படும் அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாளான நவ.11ம் தேதி வழங்கப்படும் என்று ஜெகன் அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும், டாக்டர் அப்துல் கலாம் பிரதிபா புரஷ்கார் விருதுகள் என்ற பெயரை மாற்றி, ஒய்.எஸ்.ஆர். வித்யா புரஷ்கார் விருதுகள் என்று பெயரிட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு தெலுங்குதேசம், பாஜக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, பாஜக தலைவர் லங்கா தினகர் உள்ளிட்டோர் ஜெகன் மோகன் அரசை கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து, ஒய்.எஸ்.ஆர். பெயரை மாற்றி, மீண்டும் அப்துல் கலாம் பெயரையே அந்த விருதுக்கு சூட்டி ஆந்திர அரசு ஆணை பிறப்பித்தது.

More News >>