திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு போர்த்தி ருத்ராட்ச மாலை அணிவிப்பு
திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு போர்த்தி, ருத்ராட்ச மாலையை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அணிவித்தார்.
தாய்லாந்து நாட்டிற்கு பிரதமர் மோடி சென்ற போது, அந்நாட்டு மொழியில் திருக்குறளை வெளியிட்டார். இந்த செய்தியை தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கூடவே, திருவள்ளுவருக்கு காவி உடையணிந்து நெற்றியில் பட்டை போட்ட படத்தையும் வெளியிட்டது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட், திராவிட இயக்கத் தலைவர்களும். சில தமிழ் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருவள்ளுவர் எந்த மதத்திற்கும் அப்பாற்பட்டவர் என்றும் அவரை இந்து என்று சித்தரிப்பது தவறு என்றும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று பாஜகவினர் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.
இதற்கிடையே, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் சாணம் வீசி அவமதிப்பு செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்பின், அந்த வள்ளுவர் சிலைக்கு பாஜகவினர் சிலர் பாலாபிஷேகம் செய்தனர்.
இந்நிலையில், இன்று பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், காவி துண்டு அணிவித்தார். பின்னர், ருத்ராட்ச மாலையும் அணிவித்தார். தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு தீபாராதனையும் காட்டப்பட்டது.