முரசொலி இடம் பஞ்சமி நிலமா? ஸ்டாலின் நீண்ட விளக்கம்

முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல என்பது குறித்து உரிய ஆதாரங்களை உரிய ஆணையத்திடம் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை:

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் நிலத்தில், மதஅரசியலுக்கும், அடிமைத்தனத்திற்கும், பணநாயகத்திற்கும் சிறிதும் இடமில்லை என்பதனை, தி.மு.க. கூட்டணியை மக்கள் முழுமையாக ஆதரித்தன் மூலம் உலகத்திற்கு அழுத்தம் திருத்தமாய் உறுதியாய் உணர்த்தினார்கள்.

ஜனநாயகத்தில் தோல்வியடைந்தோர், மக்கள் ஏன் தங்களைப் புறக்கணித்தார்கள் என்றாய்ந்து, மனம் திருந்தி, மக்கள் பணியாற்றி, ஆதரவைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆனால், வெற்றி பெற்ற கட்சிகளையும், அதன் தலைவர்களையும், அடிப்படையில்லாப் பழிச்சொல்லுக்கு ஆளாக்கி, அவதூறுகளைப் பரப்புவதே அவர்தம் ஜனநாயகக் கடமை என்று நினைக்கின்றனர்.

அம்முறையிலேதான், அரசு அதிகாரங்களை முறைகேடாகச் செலுத்தி, மக்களிடையே, திமுக மீதும், அதன் தலைவர்கள் மீதும் எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்று ஆலாய்ப் பறக்கின்றனர்.

அவ்வழியில் கலைஞரின் மூத்த பிள்ளையாம் முரசொலியின் மீது தொடர்ச்சியான அவதூறு; பஞ்சமி நிலத்தினை வாங்கினோமென்று!

முதலில் டாக்டர் ராமதாஸ் அக்.17ம் தேதி ஒரு அறிக்கையில், முரசொலி நிலம் பஞ்சமி நிலமென்று குறிப்பிட்டார். அன்றே, அது பச்சைப் பொய்யென்று, பட்டா நகலின் ஆதாரத்துடன் மறுப்பு அறிக்கை தந்தோம். அவர் சொன்னதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகத் தயார் என்றும்; அப்படி நிரூபிக்கத் தவறினால், அவரும், அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாசும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் அறைகூவல் விடுத்தோம். அதன் பின் அங்கிருந்து பதிலில்லை.

மீண்டும் அக்.19-ல் மூலப் பத்திரத்தைக் காட்டவில்லையென்று கூறினார். பொதுவெளியிலும் சரி, நீதிமன்றத்திலும் சரி, குற்றம் சுமத்தியவர்தானே நிரூபித்திட வேண்டும்.

முரசொலி பஞ்சமி நிலமல்ல என்று, நாங்கள் நிரூபிக்க வேண்டிய தருணம் வரும்போது, உரிய ஆவணங்களின் ஆதாரத்துடன், யாருக்கும் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபித்திடுவோம்.

அக்.21ம் தேதியன்று, பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் இது குறித்து புகார் அளித்தார். தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக தலைமைச் செயலாளருக்கு பா.ஜ.க. மாநில செயலாளர் சீனிவாசன் புகாரின் அடிப்படையில் அக்.22ம் தேதியே நோட்டீஸ் அனுப்புகிறது. இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அக்.24ம் தேதியன்று, முரசொலி நிலம் பஞ்சமி நிலமாக இருந்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்; அதன் உண்மைத்தன்மை ஆராயப்படும் என்று பேட்டியளித்தார்.

நவ.4ம் தேதி, மீண்டும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு, நவ.19 அன்று ஆஜராக உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் மூலம் அறிந்தேன்; அரசு நிர்வாகத்தில்தான் என்னே ஒரு வேகம்.

2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்த போதும், அண்மையில் சிறுவன் சுஜித் உயிருக்குப் போராடிய போதும், இன்னும் பல்வேறு நிகழ்வுகளிலும், பொது நலன் கருதி, காட்டியிருக்க வேண்டிய வேகம் அது. அது சரி, அதற்காகவா அவர்கள் ஆட்சியிலிருக்கிறார்கள்?முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல; அது, கலைஞரின் மூத்த பிள்ளை மட்டுமல்ல; ஒவ்வொரு கழகத் தொண்டனின் உயிர் மூச்சுமாகும். அதன் மீது, கேவலம், தற்காலிகமான அரசியல் லாபத்திற்காக, பழி சுமத்துவதை நான் மட்டுமல்ல; கழகத்தின் எந்தத் தொண்டரும் ஏற்க மாட்டார்கள்.

முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன் என முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கு உறுதியளிக்கிறேன்.

இந்த உறுதியே, வீண்பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதியான பதிலாய் அமையுமெனக் கருதுகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

More News >>