பேனர், பிளக்ஸ், கொடி இல்லாத 3 நாள் விழா.. காரணம் கூறக்கூடாது... கமல் கண்டிப்பு...
தனது 5 வயதில் 'களத்தூர் கண்ணம்மா' படம் மூலம் நடிக்க வந்த கமல்ஹாசன் இந்த வருடத்துடன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பதால் நாளை 7ம் தேதி தொடங்கி 3 நாட்கள் கொண்டாட்ட நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கமலின் பிறந்த தினத்தன்று அவரது தந்தையின் நினைவு தினம் ஆகும். சொந்த ஊர் பரமக்குடியில் தந்தையின் உருவச்சிலையை கமல் திறந்து வைக்கிறார்.
8 ஆம் தேதி தனது குரு கே.பாலச்சந்தரின் உருவச் சிலையை சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷல் நிறுவன அலுவலகத்தில் திறக்கிறார். 9 ஆம் தேதி இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்நிலையில் கமல்ஹாசன் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ''எனது பிறந்தநாள் அன்று பரமக்குடியில் எனது தந்தையார் டி.சீனிவாசனின் சிலையை திறக்கவுள்ளோம். அப்போது நண்பர்கள் தொண்டர்கள் மற்றும் ரசிக பெருமக்கள் எந்தவிதத்திலும் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகையில் பேனர்கள், ஃபிளெக்ஸ் மற்றும் கொடிகள் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்விசயத்தில் எவ்வித காரணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, எந்நிலையிலும் சமரசங்கள் செய்து கொள்ளப்ட மாட்டாது என்பதை கண்டிப்பாக தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.