எமர்ஜென்சியின் போது நாட்டில் என்ன நடந்தது? நீதிபதிகள் கேள்வி

எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது நாட்டில் என்ன நடந்தது என்று காஷ்மீர் வழக்கில் காங்கிரஸ் வழக்கறிஞர் கபில்சிபலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடாது என்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.

முன்னாள் முதல்வர்கள் உமர்அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட அரசியல் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் நடமாட்டத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, குலாம்நபி ஆசாத் சார்பில் சீனியர் வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜரானார். அவர் வாதாடுகையில், அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கும் 70 லட்சம் மக்களும் முடக்கப்பட்டிருக்கிறார்கள். நாட்டில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கை கடந்த மூன்று மாதங்களாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

அப்போது நீதிபதி ரமணா குறுக்கிட்டு, 1970களில் இந்திராகாந்தி எமர்ஜென்சி அறிவித்த காலத்தில் என்ன நடந்தது? என்று சிரித்து கொண்டே கேட்டார். அதற்கு பதிலளித்த கபில்சிபல், அரசியல்சட்டப்பிரிவு 352ன் கீழ் எமர்ஜென்சி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது கூட மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படவில்லை. இப்போது ஒருவர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமானால் கூட போக முடியாத நிலை உள்ளது.

மருத்துவமனை திறந்திருக்கும். எப்படி போவது? போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கமே வர்த்தகம் செய்யலாம், தவறில்லை. ஆனால், வர்த்தகத்தையே அழித்து விட அனுமதிக்க முடியாது என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள், காஷ்மீரில் இப்போது எத்தனை பஸ்கள் இயக்கப்படுகின்றன? எத்தனை டிரக் வண்டிகள் இயக்கப்படுகின்றன? போக்குவரத்து வசதிகள் என்ன செய்யப்பட்டிருக்கிறது என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர். இன்று(நவ.7) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

More News >>