வீட்டுவசதி திட்டங்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதி.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
நிதித் தட்டுப்பாடு காரணமாக பாதியில் நின்று போன வீட்டுவசதித் திட்டங்களை முடிப்பதற்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவை கூட்டம், புதன்கிழமை தோறும் நடைபெறும். அதன்படி, நேற்று(நவ.6) நடைபெற்ற கூட்டத்தில், பாதியில் நிற்கும் வீட்டுவசதி திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
நாடு முழுவதும் நிதி தட்டுப்பாடு காரணமாக 1600 வீட்டுவசதித் திட்டங்கள் பாதியில் நின்று போனதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை நிறைவேற்றி, மக்களுக்கும், விற்பவர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுவதற்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடியும், எல்.ஐ.சி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இணைந்து ரூ.15 ஆயிரம் கோடியும் ஒதுக்கீடு செய்யும்.
இதன் மூலம், பாதியில் நிற்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, 4 லட்சத்து 58 ஆயிரம் வீடுகள் விற்கப்படும். இது வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் உதவிகரமாக இருக்கும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.