பணத்தால் எம்.எல்.ஏ.க்களை வளைக்க பாஜக முயற்சி.. சிவசேனா குற்றச்சாட்டு
பாஜக பணபலத்தால் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சிப்பதாக சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.
மகராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தேர்தல் உடன்பாட்டின் போது, முதல்வர் பதவியை இருகட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் வைத்து கொள்வது என்றும், அமைச்சரவையில் சரிபாதியாக பிரித்து கொள்வது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டதாக சிவசேனா கூறுகிறது. இதன்படி, சிவசேனாவுக்கு முதல்வர் பதவி தர வேண்டுமென்றும் கேட்கிறது. ஆனால், பாஜக அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது.
இதனால், மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வந்து 2 வாரங்களாகியும் ஆட்சியமைக்கப்படவில்லை. இந்நிலையில், பாஜக இன்று (நவ.7) கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரப் போவதாக கூறியிருக்கிறது. இதற்கிடையே, பாஜகவை தொடர்ந்து தாக்கி வரும் சிவசேனா தனது பிடிவாதத்தை கைவிடவில்லை.
மேலும், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், பட்னாவிஸ் ஆட்சியால் விவசாயிகளின் கோரிக்கைகள் கவனிக்கப்படவில்லை. மக்கள், சிவசேனா முதலமைச்சர் வர வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆனால், பாஜக பணபலத்தால் ஆட்சியமைத்து விடலாம் என்று நினைக்கிறது. சிவசேனா எம்.எல்.ஏ.க்களை பணபலத்தால் இழுக்க முயற்சிக்கிறார்கள். இது குறித்து தொடர்ந்து பல புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மகாராஷ்டிர அரசியலில் அதை அனுமதிக்கவே மாட்டோம் என்று எழுதப்பட்டுள்ளது.