அயோத்தி பேச்சுகளுக்கு பிரதமர் மோடி தடை.. அமைச்சர்களுக்கு எச்சரிக்கை
அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தில் பாபர்மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் 2.77 ஏக்கர் நிலத்திற்கு இந்து அமைப்புகளும், முஸ்லிம் அமைப்புகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. சா்ச்சைக்குரிய நிலத்தை இருதரப்பினரும் பங்கிட்டு கொள்ளும் வகையில் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய் இம்மாதம் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
இந்நிலையில், கடந்த 27ம் தேதியன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர்மோடி பேசும் போது, அயோத்தி வழக்கில் தீர்ப்பு எவ்வாறாக இருந்தாலும் சமூக நல்லிணக்கத்தை மக்கள் காப்பாற்ற வேண்டும். அலகாபாத் ஐகோர்ட் இந்த வழக்கில் 2010ல் தீர்ப்பளித்த போது பெரிய பிரச்னைகள் வரும் என்று பேசப்பட்டாலும் எதுவும் ஏற்படவில்லை. எனவே, மக்கள் அதே போல் அமைதி காக்க வேண்டும் என்றார்.
இ்ந்நிலையில், மத்திய அமைச்சர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று(நவ.6) பேசுகையில், அயோத்தி விவகாரம் தொடர்பாக யாரும் தேவையற்ற கருத்துக்களை கூறக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தீர்ப்பு எப்படியிருந்தாலும் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசக்கூடாது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.