காங்கிரஸ் செயற்குழு நவ.10ம் தேதி கூடுகிறது..
காங்கிரஸ் செயற்குழு வரும் 10ம் தேதி டெல்லியில் கூடுகிறது. இதில், நாடாளுமன்றத் தொடர், அயோத்தி பிரச்னை, பிரியங்கா காந்தி செல்போன் ஊடுருவல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. விவசாயிகள் பிரச்னை, பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம் உள்பட பல்வேறு பிரச்னைகளை இந்த தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு வரும் 10ம் தேதி, கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா தலைமையில் கூடுகிறது. இதில், நாடாளுமன்றத் தொடரில் காங்கிரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், பிரியங்கா காந்தியின் செல்போன் ஊடுருவல், அயோத்தி வழக்கு, மகாராஷ்டிர நிலவரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் செயற்குழுவில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.