தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரணியில் போலீஸ் தடியடி! - எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரணியில் போலீஸ் தடியடி நடத்தியதற்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பேரணியின்போது தொண்டர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
இந்த பேரணியில் காவல்துறை மேற்கொண்ட தடியடி கண்டிக்கத்தக்கது. பேரணியை ஒழுங்குப்படுத்தும் பெயரில் உருட்டுக் கட்டைகளையும், மரப்பலகைகளையும் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் மீது காவல்துறை அநியாயமான முறையில் மிகக்கொடூரமாக தாக்குதலை காவல்துறை மேற்கொண்டுள்ளது.
மக்களுக்காக பணியாற்றும் அரசியல் கட்சியின் ஊர்வலத்தில் காவல்துறை இப்படி நடந்து கொண்டது ஏற்கத்தக்கதல்ல. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினர், ரவுடிகளை போன்று உருட்டுக் கட்டைகளை கொண்டு தாக்கியது கண்டிக்கத்தக்கது.
காவல்துறையின் இத்தகைய அத்துமீறல் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.