அதிமுக பொதுக்குழு நவ.24ல் கூடுகிறது.. ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் 24ம் தேதி சென்னையில் கூடுகிறது. இது குறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 24ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு பேலஸ் மண்டபத்தில் நடைபெறும். செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். அழைப்பிதழுடன் உறுப்பினர்கள் வந்து கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியின் பொதுக்குழு கடந்த 2016ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. அதில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர். அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதற்கான தீர்மானத்தை எடுத்து கொண்டு போயஸ்கார்டன் சென்று சசிகலாவிடம் அதை அளித்தார்.

அதன்பிறகு முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினார். பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் சிறைக்கு சென்ற சசிகலா, அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தல் கமிஷன் விதிப்பதி ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். அதன்படி, 2018ம் ஆண்டில் பொதுக்குழு கூட்டப்பட்டிருக்க வேண்டும். பல்வேறு காரணங்களை கூறி 6 மாதம் தள்ளி வைத்தனர். பின்னர், மீண்டும் தேர்தல் கமிஷனில் கால அவகாசம் பெற்றனர்.

இந்த சூழலில்தான், தற்போது அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டப்படுகிறது. சமீப காலமாக சசிகலா விரைவில் விடுதலையாவார் என்ற செய்தியும், அவர் மீண்டும் கட்சிக்குள் வருவார் என்றும் செய்திகள் உலா வருகின்றன. இன்னொரு புறம், ரஜினியை பாஜக கொண்டு வந்தால், அதிமுகவை எப்படி காப்பாற்றுவது என்றொரு பேச்சும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால், இந்த பொதுக்குழுவில் காரசார விவாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், யாரையும் பேசவிடாமல் தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றி சமாளிக்கவும் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

More News >>