சியான் விக்ரம் மகன் நடித்த ஆதித்ய வர்மா ரிலீஸ் தள்ளி வைப்பு...காரணம் பிகில், கைதியா...?
By Chandru
சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. இப்படம் நவம்பர் 8ம் தேதி (நாளை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் 21ம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. கிரிசயா இயக்கி உள்ளார்.
பனிதா சந்து, பிரியா ஆனந்த் ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர். தணிக்கையில் இப்படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சக்கைபோடு போட்டு வசூல் சாதனை புரிந்தபடம் அர்ஜுன் ரெட்டி. இப்படம்தான் தமிழில் ஆதித்ய வர்மா பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது. முன்னதாக இதே படத்தை இயக்குனர் பாலா தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார். துருவ் ஹீரோவாக நடித்தார். அப்படம் திருப்தி இல்லாததால் முழுபடமும் தூரமாக தூக்கி வைக்கப்பட்டு தற்போது இயக்குனர் கிரிசயா, ஆதியா வர்மாவை இயக்கி உள்ளார்.
விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகும் படம் என்பதால் விக்ரம் ரசிகர்கள் பெரிய அளவில் இப்படத்தை எதிர்பார்த்திருக் கின்றனர். ஆனால் படம் தள்ளிவைக்கப்பட்டது அவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தீபாவளியையொட்டி விஜய் நடிப்பில் வெளியான பிகில், கார்த்தி நடித்த கைதி படங்கள் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக் கிறது. அதற்கான புரமோஷன் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. வார இறுதியில் மீண்டும் அப்படம் 2ம் கட்ட வசூலை கல்லா கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஆதித்யா வர்மா வசூலை பாதித்துவிடக்கூடாது என்ற பாதுகாப்பு உணர்வும் படம் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஜெய் நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியுள்ள கேப்மாரி மற்றும் மிக மிக அவசரம், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். போன்ற படங்கள் நாளை ரிலீசாகும் என்று தெரிகிறது.