விஜயகாந்த் ராசியால் அதிமுகவுக்கு வெற்றி.. பிரேமலதா பேச்சு..
விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களில் விஜயகாந்த் ராசியால் அதிமுகவுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னையில் நேற்று(நவ.7) நடந்தது. பொருளாளர் பிரேமலதா முன்னிலை வகித்தார். அவைத் தலைவர் இளங்கோவன், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பிரேலதா விஜயகாந்த் பேசும் போது, நாடாளுமன்றத் தேர்தலின் போது கேப்டன்(விஜயகாந்த்) ஊரில் இல்லை. அதனால், பா.ம.க, பா.ஜ.க போன்ற கட்சிகள் அதிமுகவிடம் முன்கூட்டியே அதிக இடங்களை பெற்று விட்டன. அவர்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கிய பின்பு, நம்மை அழைத்ததால் குறைந்த இடங்களே நமக்கு கிடைத்தது. இந்த முறை அது நடக்காது. உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் நமக்குரிய இடங்களை கேட்டு பெறுவோம்.
இந்த உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம். எனவே, இதில் நாம் பெறும் வெற்றி, சட்டமன்றத் தேர்தலுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதனால் எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் நாம் கடைசியாக அழைக்கப்பட்டோம். ஆனால், விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் அதிமுகவினர் முதலில் கேப்டனைத்தான் சந்தித்து ஆதரவு கேட்டனர். அதனால், இந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. கேப்டன் ராசி அப்படி... சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி. கேப்டனின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் முதலமைச்சராக பொறுப்பேற்கும் காலம் நிச்சயம் வரும் என்றார்.
கூட்டத்தில், திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை அனைத்து கட்சிகளும் தவிர்க்க வேண்டும் என்பது உள்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், தேமுதிகவின் பலம் எங்களுக்கு தெரியும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுகவிடம் இருந்து கணிசமான இடங்களை கட்டாயம் கேட்டு பெறுவோம், முதல்வரும் கட்டாயம் தருவோம் என உறுதி அளித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக போட்டியிட, அதிமுகவிடம் இருந்து பெற வேண்டிய இடங்கள் குறித்து பேச ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. நாங்களும் ஆட்சியில் அமர்வோம். அதற்கான நேரம் வரும் என்றார்.