ஸ்டாலினுக்கு எதிராக மீண்டும் மாஃபா பாண்டியராஜன் பேச்சு..
மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை 2 நாளில் வெளியிடுவோம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
கடந்த 1971ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, தனக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை சமாளிக்க அரசியல் சட்டப்பிரிவு 352ன் கீழ் நெருக்கடி நிலை பிரகடனம் செய்தார். அப்போது, உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் என்ற மிசா(MISA) சட்டத்தை கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் கீழ் யாரையும் எந்த நேரத்திலும் கைது செய்யலாம், எந்த இடத்திலும் போலீசார் சோதனை செய்யலாம் என்று கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
தமிழகத்தில் அப்போது கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்றது. திமுகவும் மற்ற எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து மிசா சட்டத்தை கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்தது. அந்த நேரத்தில் திமுக முக்கியப் பிரமுகர்கள் பலரும் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அப்போதுதான் திருமணம் முடித்திருந்த மு.ஸ்டாலினும் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் சிறையில் இருந்தார். மேலும், கருணாநிதி ஆட்சியும் கலைக்கப்பட்டது. மிசாவை எதிர்த்தால்தான் திமுக மீது இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும், ஊழல் குற்றச்சாட்டுகளால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும் பலவாறாக பேசப்பட்டது.
இந்நிலையில், தற்போது மீண்டும் மிசா சர்ச்சை வெடித்துள்ளது. மத்திய பாஜக அரசுக்கு மிகவும் ஆதரவாகவும், திமுகவை கடுமையாக விமர்சித்தும் பேசி வரும் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சமீபத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்றும் பாலியல் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் கூறினார்.
இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மாஃபா பாண்டியராஜன் ஒரு அரசியல் வியாபாரி, அவருக்கு எந்த வரலாறும் தெரியாது என்று திமுகவினர் கடுமையாக சாடினர். மேலும், சென்னையில் மாபா பாண்டியராஜன் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர், அவரது கொடும்பாவியையும் எரித்தனர்.
இதற்கு மாஃபா பாண்டியராஜன், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்!முதல் முறை என் வீட்டுக்கு எதிரில் என் உருவத்திற்கு பாடை கட்டி இழுத்து தீக்கிரையாக்கியதைக் கண்டேன் என்று ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து பதிவிட்டனர்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், திரும்பி வராதது காலம்; திருத்தி எழுதப்பட முடியாதது வரலாறு. எவ்வளவு படித்திருந்தாலும், சிலருக்கு இந்த அடிப்படை புரியாது. சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
நான் மட்டுமல்ல, தி.மு.க.வைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அன்றைய மத்திய அரசு அமல்படுத்திய அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்த்த காரணத்தால், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டோம். அதற்கான ஆவணங்கள் சிறைத்துறையில், சட்டமன்ற ஆவணங்களில், நீதியரசர் எம்.எம். இஸ்மாயில் அவர்களால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நிரம்ப இருக்கின்றன. படிக்கத் தெரிந்தவர்கள், படிக்க மனமிருப்பவர்கள், பார்த்துத் தெரிந்து தெளிவு கொள்ளலாம். எல்லாம் எனக்குத் தெரியும் என்ற தன்முனைப்பால், தெளிவு பிறக்காது.
அரசியலமைப்புச் சட்டத்தின்பால் பதவிப்பிரமாணம் எடுத்துவிட்டு, நாலாந்தரப் பேச்சாளரின் நடையைத் தழுவி, பாண்டியராஜன் பேசியிருப்பது, உண்மையில் எனக்கு வருத்தம் தரவில்லை. ஏனென்றால், கல்லிலும் முள்ளிலும் நடந்து கடும் பயணம் மேற்கொண்டு, சொல்லடி பட்டு துயரங்களைத் தாங்கி, தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும். ஆனால் பாண்டியராஜன், அந்த வகைப்பட்டவர் அல்ல என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை. அவரது கட்சிக்காரர்களே முழுவதையும் அறிவார்கள் என்று கூறியதுடன், அமைச்சருக்கு எதிரான போராட்டங்களை கைவிடுமாறு திமுகவினரை கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து மாஃபா பாண்டியராஜன், நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. போராட்டங்களை கைவிடக் கூறிய ஸ்டாலினுக்கு நன்றி என்று கூறினார். இதனால், இந்தப் பிரச்னை ஓய்ந்து விட்டது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்று(நவ.8) காலையில் மீண்டும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மிசா விவகாரத்தை மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளார். அவர், “மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவோம். ஷா கமிஷனில் ஸ்டாலின் பெயர் இல்லை என்பதால்தான் நான் சந்தேகம் எழுப்பினேன்.
இன்னும் 2 நாளில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இது குறித்து பதிலளிக்கப்படும். மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை வெளியிடுவோம்” என்று கூறியுள்ளார். இதனால், திமுகவினர் மீண்டும் கொதிப்படைந்துள்ளனர்.