பணமதிப்பிழப்பு.. தீவிரவாத தாக்குதல்.. ராகுல் விமர்சனம்

பணமதிப்பிழப்பு தீவிரவாத தாக்குதல் நடந்த 3வது ஆண்டு தினம் என்று ராகுல்காந்தி ட்விட்டரில் கடும் விமர்சனம் செய்திருக்கிறார்.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டார். கருப்பு பணத்தையும், கள்ளநோட்டுகளையும் ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாதவை ஆக்கி விட்டதாக அவர் அறிவித்தார். இதன்பின்பு, அந்த நோட்டுகளை மாற்றுவதற்கு அவகாசம் தரப்பட்டது. மேலும் புதிய 2 ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு தரப்பட்டன. இதனால் சில மாதங்களுக்கு மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 3வது ஆண்டு தினம் இன்று என்பதை குறிப்பிட்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் கடும் விமர்சனம் செய்திருக்கிறார். அவர் வெளியிட்ட பதிவில், பணமதிப்பிழப்பு தீவிரவாத தாக்குதலின் 3வது ஆண்டு தினம். அந்த செயல் இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்தது, பலரின் வாழ்க்கையை முடித்தது, லட்சக்கணக்கான சிறு தொழில்களை ஒழித்தது, பல லட்சம் மக்களை வேலையில்லாதவர்களாக மாற்றியது.

இந்த தீய செயலுக்கு பின்னால் இருந்தவர்கள் நீதிக்கு முன்பாக நிறுத்தப்பட வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், எனக்கு 50 நாள் அவகாசம் தாருங்கள், நான் தவறு செய்திருந்தால் எரித்து விடுங்கள் என்று மோடி பேசியதாக வெளியான நாளிதழ் செய்தியையும் அவர் இணைத்திருந்தார்.

More News >>