அயோத்தி வழக்கில் இன்று காலை தீர்ப்பு..
அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் இன்று(நவ.9) தீர்ப்பு வழங்க உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்பினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது.
கடந்த 2010ம் ஆண்டில் அலகாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்பில் நிலத்தை பங்கிட்டு கொள்ள உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து இருதரப்பினருமே மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அவற்றை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்தது. 40 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வரும் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக அவர் விசாரித்த வழக்குகளில் தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால், அடுத்த வாரத்தில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று(நவ.9) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது. இந்த தீ்ர்ப்பையொட்டி அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதுமே முக்கிய இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தீர்ப்பு எப்படி இருந்தாலும் நாம் அமைதி காக்க வேண்டுமென்று இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.