வெற்றிடம் எல்லாம் நிரப்பியாச்சு.. ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி
வெற்றிடம் எல்லாம் எப்பவோ நிரப்பியாச்சு... என்று ரஜினிக்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகன்.
சென்னை போயஸ்கார்டனில் தனது வீட்டின் முன்பாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், எனக்கு பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள். திருவள்ளுவருக்கு எப்படி காவி சாயம் பூசப் பார்த்தார்களோ, அதை போல் எனக்கு பூசப் பார்க்கிறார்கள். நானும் மாட்டிக் கொள்ள மாட்டேன். திருவள்ளுவரும் மாட்டிக் கொள்ள மாட்டார் என்று கூறினார்.
அதன் பின்பு, மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து பேட்டி அளித்தார். அப்போது பாஜகவுக்கு ஆதரவாக மாறி, காவி விஷயத்தை மீடியா தான் பெரிதாக்குவதாக பழி போட்டார். மேலும், தமிழ்நாட்டில் ஆளுமைமிக்க தலைமை இல்லாமல் வெற்றிடம் இருக்கிறது என்றும் கூறினார்.
உடனே, பல்வேறு கட்சித் தலைவர்களும் இதற்கு கருத்து தெரிவித்தனர். ரஜினியின் முதல் பேட்டியை மட்டும் பார்த்த மாத்திரத்திலேயே, பாஜகவுக்கு ரஜினி செமத்தியாக பதில் கொடுத்து விட்டார் என்று பலரும் கருத்து கூறினர். அதே சமயம், ஆளுமைமிக்க தலைவர் இல்லை என்ற கருத்துக்கு திமுக பதிலடி கொடுத்தது. திமுக மூத்த தலைவரும், பொருளாளருமான துரைமுருகன் கூறுகையில், வெற்றிடம் ஏற்பட்டாலே அதை காற்று நிரப்பி விடும் என்பது விஞ்ஞானம்.
தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பி விட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அரசியல் பயணத்தில் ரஜினி தொடர்ந்து இல்லாததால், ஸ்டாலின் அந்த வெற்றிடத்தை நிரப்பியதை ரஜினி உணர்ந்திருக்க மாட்டார். ரஜினி நேரடியாக அரசியலுக்கு வரும் போது, அதை உணர்ந்து கொள்வார் என்று தெரிவித்தார்.