அயோத்தி வழக்கு தீர்ப்பு.. அமைதி காக்க வலியுறுத்தல்..
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொண்டு அமைதி காக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளனர்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்வதற்கும் உத்தரவிட்டு சுப்ரீம் ேகார்ட் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது.
இது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில், இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. இதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் அமைதி காக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்றார்.
மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறுகையில், இந்த தீர்ப்பை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லா தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்றார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறுகையில், இந்த தீர்ப்பு எல்லோராலும் வரவேற்கப்பட வேண்டும். இந்த தீர்ப்பு சமூக நல்லிணக்கத்திற்கு உதவியாக இருக்கும். இதற்கு மேலும் இந்த பிரச்னையில் எந்த மோதலும் இருக்கக் கூடாது. எல்லோரும் அமைதியாக இதை ஏற்க வேண்டுமென்பது எனது கோரிக்கை என்றார்.
அயோத்தி வழக்கில் ஒரு மனுதாரரான நிர்மோகி அகாராவின் செய்தி தொடர்பாளர் கார்த்திக் சோப்ரா கூறுகையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மிகச் சிறப்பானது. எங்களுடைய 150 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் அங்கீகாரம் அளித்துள்ளது. மேலும், நிர்மோகி அகாராவுக்கு அறங்காவலர் குழுவில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
முஸ்லிம் தரப்பு மனுதாரர்களில் ஒருவரான முகமது இக்பால் அன்சாரி கூறுகையில், சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பை அளித்திருப்பதை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த தீர்ப்பை மதிக்கிறேன் என்றார்.
சன்னி வக்பு வாரியத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜபார்யாப் ஜிலானி கூறுகையில், நாங்கள் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், இந்த தீர்ப்பு, எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. எனவே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் ஆலோசித்து முடிவெடுப்போம் என்றார்.