கர்தார்பூர் வழித்தடம் திறப்பு.. இம்ரான்கானுக்கு மோடி நன்றி

கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, சீக்கிய புனித பயணிகளின் முதல் குழுவை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் கடைசியாக பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் கர்தார்பூரில் வாழ்ந்தார். அதனால், அங்கு கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. சீக்கியர்களின் புனிததலமான அந்த குருத்வாராவுக்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் செல்கிறார்கள். இந்தியாவின் எல்லையில் இருந்து நான்கைந்து கி.மீ. தூரத்தில் உள்ள இந்த குருத்வாராவுக்கு செல்வதற்காக பாகிஸ்தான் விசா பெறுவது உள்பட பல சிரமங்களை சீக்கியர்கள் அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சீக்கியர்கள் சென்று வழிபாடு நடத்தி வரும் வகையில் புதிய வழித்தடம் அமைக்க பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை விடுத்து வந்தது.

தற்போது, நமது பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் தேராபாபா நானக்கையும், பாகிஸ்தானின் கர்தார்பூர் சாகிப் குருத்வாராவையும் இணைக்கும் வகையில் புதிய வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்திற்கான ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை குர்தாஸ்பூரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதே போல், பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தொடங்கி வைத்தனர்.

கர்தார்பூருக்கு செல்லும் முதல் குழுவை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில், மன்மோகன்சிங், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் மோடி பேசும் போது, இந்தியாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்ததற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் குருநானக்கின் 550வது பிறந்த தின விழாவுக்கு முன்பு இந்த வழித்தடம் திறக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

More News >>