ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு.. பாஜக இன்று ஆலோசனை

 

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு தனிப்பெரும் கட்சியான பாஜகவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, மாநில பாஜக மூத்த தலைவர்கள் குழு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, கூட்டணி ஆட்சிதான் அமைக்க முடியும்.

சிவசேனா கட்சிக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை விட்டு தருவதாக தேர்தல் உடன்பாட்டின் போது பாஜக உறுதியளித்ததாக சிவசேனா தரப்பில் கூறப்படுகிறது. அதனால், முதல்வர் பதவியை சிவசேனா பிடிவாதமாக கேட்டு வருகிறது. பாஜகவோ தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்து வருகிறது. இதனால், தேர்தல் முடிவு வெளியாகி 15 நாட்களுக்கு மேலாகியும் இது வரை மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமையவில்லை.

இந்நிலையில், தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பொறுப்பேற்க முன் வருவாரா அல்லது மெஜாரிட்டியை உறுதி செய்யும் வரை பதவியேற்க மறுப்பாரா என தெரியவில்லை.

சிவசேனா ஆதரவு கிடைக்காமல் ஆட்சிப் பொறுப்பேற்றால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற முடியாது என்பது உறுதி. எனவே, ஆட்சியமைக்க உரிமை கோருவதா, கவர்னரின் அழைப்பை நிராகரிப்பதா என்பது குறித்து பாஜகவின் மாநில உயர்நிலைக் குழு இன்று ஆலோசிக்கவுள்ளது.

இது குறித்து, கட்சியின் மூத்த தலைவர் முங்கன்திவார் கூறுகையில், இன்றைய கூட்டத்தில் கவர்னர் அழைப்பு குறித் விவாதிக்கப்படும். சிவசேனாவுக்கு வேறு வழியில்லை. வெறும் 44 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள காங்கிரஸ், சிவசேனாவின் ஆதரவில் ஆட்சியமைக்க மாட்டோம் என்று கூறி விட்டது. அதே போல், சிவசேனா ஆட்சியமைக்கவும் காங்கிரஸ் ஆதரிக்காது. எனவே, சிவசேனா பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் பேசுவோம் என்றார்.

இதற்கிடையே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், மகாராஷ்டிராவில் நிச்சயம் புதிய ஆட்சி அமையும். யாரும் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்தார். எனவே, கவர்னரின் அழைப்பை பாஜக நிராகரித்தால், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சியமைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி அமைந்தால் மகராராஷ்டிர அரசியலே மாறி விடும்.

More News >>