சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவியேற்பு
சென்னை ஐகோர்ட்டில் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இன்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியை மேகாலயா ஐகோர்ட்டுக்கும், அங்குள்ள தலைமை நீதிபதி மிட்டலை சென்னை ஐகோர்ட்டுக்கும் பணியிட மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.சார்ட்டர்டு ஐகோர்ட்டான சென்னை ஐகோர்ட்டில் இருந்து மிகச் சிறிய ஐகோர்ட்டான மேகாலயா ஐகோர்ட்டுக்கு தன்னை மாற்றுவதை தஹில் ரமானி, அவமானமாக கருதினார்.
பணிமாற்றத்தை மறுபரிசீலனை செய்யக் கோரினார். அதை சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் ஏற்கவில்லை. இதையடுத்து அவர் ராஜினாமா செய்தார். இதில் சில நாட்கள் கழிந்தது.இதைத் தொடர்ந்து, கொலிஜியம் மீண்டும் பிறப்பித்த உத்தரவில் பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த அமரேஸ்வர் பிரதாப் சாஹியை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்தது. அவரை நவம்பர் 13ம் தேதிக்குள் பணியில் சேருமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இன்று(நவ.11) காலையில் பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஐகோர்ட் நீதிபதிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், சுப்ரீம் கோர்ட் மற்றும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் சட்டம் பயின்று வழக்கறிஞராக பணியாற்றினார். கடந்த 2004ம் ஆண்டில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்றார். 2018ம் ஆண்டு வரை அங்கு பணியாற்றிய அவர், அந்த ஆண்டில் பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி உயர்வில் சென்றார். தற்போது சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.