டி.என்.சேஷன் மறைவு.. பிரதமர், முதல்வர் இரங்கல்.. ராகுல் புகழாராம்
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.
சமீப காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சேஷன், சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு(நவ.10) மரணமடைந்தார். அவரது உடலுக்கு பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டி.என்.சேஷன் ஒரு சிறந்த அரசு அதிகாரியாக பணியாற்றினார். அவர் விடா முயற்சியுடனும், நேர்மையுடனும் நாட்டுக்கு சேவையாற்றினார். தேர்தல் சீர்திருத்தங்களுக்கு அவர் எடுத்து கொண்ட முயற்சிகள், நாட்டின் ஜனநாயகத்தை வலுவானதாக மாற்றியுள்ளது. அவரது மறைவு செய்தி கேட்டு வேதனையடைகிறேன். ஓம் சாந்தி என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடல் நலக்குறைவால் நவ.10ம் தேதி காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.ஐ.ஏ.எஸ் அதிகாரியான சேஷன் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அவர் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய காலத்தில், தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். தமிழக அரசில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில், இன்று போல் அல்லாமல் தேர்தல் ஆணையர்கள் பாரபட்சமின்றி, துணிவுடன், மதிக்கத்தக்க முறையில் பணியாற்றிய காலம் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் டி.என்.சேஷன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதே போல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முஸ்லீம்லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1955ம் ஆண்டு ஒதுக்கீட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற டி.என்.சேஷன், தமிழக அரசில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். 1990 முதல் 1996ம் ஆண்டு வரை தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றினார். அப்போது அவர், அரசியல் சட்டத்தில் தேர்தல் ஆணையத்திற்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர்.
இதன்மூலம், அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர். அதனாலேயே, அவரது அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தில் மேலும் 2 தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அது முதல் தேர்தல் ஆணையத்தில் 3 ஆணையர்கள் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.