காஷ்மீரில் மீண்டும் ரயில் சேவை துவக்கம்.. அதிகாரிகள் ஆய்வு

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ரயில் சேவையை துவக்குவதற்கான ஆய்வு பணிகளை ரயில்வே அதிகாரிகள் இன்று(நவ.11) மேற்கொண்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ கடந்த ஆக.5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இந்தியாவுக்குள் இருந்தாலும் தனிநாடு போல் சில அதிகாரங்களை பெற்றிருந்த ஜம்மு காஷ்மீர், இப்போது மற்ற மாநிலங்களைப் போல் ஆகி விட்டது. மேலும், ஜம்முகாஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக இந்த மாநிலம் பிரிக்கப்பட்டு விட்டது.

மத்திய அரசின் இந்த அதிரடி முடிவுகளால் மாநிலத்தில் பிரச்னைகள் ஏற்படக் கூடாது என்பதற்காக முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் போக்குவரத்து, தொலைத் தொடர்பு சேவைகளில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. ரயில்சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கட்டு்ப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இதில், ரயில் சேவையை மீண்டும் துவக்குவதற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஸ்ரீநகரில் இன்று ரயில்வே பாதைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, ரயில்சேவையை துவக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். நாளை முதல் காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவக்கப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

More News >>