இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தது ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி கவுகாத்தியில் நேற்று செவ்வாய்கிழமை [10-10-17] அன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களை எடுத்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் படுமோசமாக சொதப்பினார்கள். ரோஹித் சர்மா (8), விராட் கோலி (0), மணீஷ் பாண்டே (6), ஷிகர் தவான் (2), என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், 27 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இந்த நான்கு விக்கெட்டுகளையும் பெஹ்ரண்டார்ஃப் வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய கேதர் ஜாதவ் (27), ஹர்த்திக் பாண்டியா (25) ஆகியோர் ஓரளவு சிறப்பான ரன்களை எடுத்து கவுரமான ஸ்கோரை எடுக்க உதவினர். ஆஸி. அணி தரப்பில் அதிகப்பட்சமாக பெஹ்ரண்டார்ஃப் நான்கு விக்கெட்டுகளையும், ஆடம் ஷம்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடம் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் அதன் தொடக்க அதிரடி ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் (2), ஆரோன் பிஞ்ச் (8) என அடுத்தடுத்து வெளியேற 13 ரன்களுக்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
இதனால், தொடர்ந்து சொதப்பி வரும் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தனர். ஆனால், ஜோடி சேர்ந்த ஹென்ரிக்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் ஜோடி சேர்ந்து இந்திய பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர்.
குறிப்பாக குல்தீப் யாதவ் வீசிய 4 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 46 ரன்கள் குவித்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 15.3 ஓவர்களில் 122 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என இரு அணிகளும் சம அளவில் உள்ளன. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் வெள்ளியன்று நடைபெற உள்ளது.