அயோத்தி வழக்கு தீர்ப்பு.. சட்டநிபுணர்கள் சர்ச்சை..
அயோத்தி ராமஜென்மபூமி வழக்கின் தீர்ப்பில் பல்வேறு கேள்விகள் எழுவதாக சட்டநிபுணர்கள் கூறியுள்ளனர்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு 3 மாதத்திற்குள் ஒரு டிரஸ்ட் அமைக்க வேண்டுமென்றும், அந்த டிரஸ்ட் கோயில் கட்டும் பணியை தொடங்க வேண்டுமென்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், சன்னி வக்பு வாரியத்திற்கு வேறொரு பகுதியில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டுமென்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில், சட்ட நிபுணர்கள் இந்த தீர்ப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். பாபர் மசூதி இடிக்கப்பட்டதே சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இடிக்கப்பட்டதே சட்டவிரோதம் என்று கூறி விட்டு, எதற்காக இடிக்கப்பட்டதோ (ராமர்கோயில் கட்டுவதற்கு), அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு எப்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட முடியும்? இடிக்கப்பட்டது சட்டவிரோதம் என்றால், எதற்காக இடிக்கப்பட்டதோ அதை செய்வதும் சட்டவிரோதம்தானே என்பது உள்பட சில கேள்விகளை சட்ட நிபுணர்கள் எழுப்புகின்றனர்.
சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கூறுகையில், மத்திய அரசிடம் கோயிலை கட்டுவதற்கு எப்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட முடியும்? நமது அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியா மதசார்பற்ற நாடு. இதன் அரசாங்கம் மதங்களில் இருந்து விலகி செயல்பட வேண்டும். ஒரு மதத்திற்கு ஆதரவாகவோ அல்லது ஒரு மதத்திற்கு எதிராகவோ அரசு செயல்பட முடியாது. இதை எஸ்.ஆர். பொம்மை வழக்கில் சுப்ரீம்கோர்ட்டின் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, கோயில் கட்டுவதற்கு டிரஸ்ட் அமைக்குமாறு மதசார்பற்ற அரசுக்கு கோர்ட் உத்தரவிட அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை என்றார்.
பெங்களூரு தேசிய சட்டப் பள்ளி துணை வேந்தர் ஆர்.வெங்கடராவ் கூறுகையில், அயோத்தியின் சில பகுதிகள் ஆர்ஜிதச் சட்டத்தின் பிரிவு 6ஏ-ன்படி அந்த சர்ச்சைக்குரிய நிலத்தை ஒரு டிரஸ்ட்டியிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 7-ன்படி அந்த நிலத்தை மத்திய அரசே பராமரிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை சுப்ரீம் கோர்ட் செல்லும் என்று தீர்ப்பு கூறியிருக்கிறது என்றார்.
இதற்கு முன்னாள் நீதிபதி சந்துரு பதிலளிக்கையில், அயோத்தி வழக்கில் மத்திய அரசு ஒரு வாதியோ, பிரதிவாதியோ அல்ல. எனவே, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கக் கூடாது. மாறாக, சிவில் நீதிமன்றத்திற்குத்தான் உரிய உத்தரவைப் பிறப்பித்திருக்க வேண்டும்என்றார்.