பைக்கில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ தங்கம் பறிமுதல் இருவர் கைது
புதுக்கோட்டை: இரண்டு சக்கர மோட்டார் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, மோட்டார் பைக்கில் வந்த இளைஞர்கள் அதிகாரிகளை கண்டதும் மிரண்டனர். இதனால், அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில், மோட்டார் பைக்கை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் தங்கம் இருந்தது தெரிந்தது. மேலும், இதுகுறித்து இருவரிடமும் விசாரணை நடத்தியதில் அது 20 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும், இந்த தங்கம் எங்கிருந்து கடத்தப்பட்டது, இதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.