மகராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி.. மத்திய அரசு பரிந்துரை
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டின் போது, சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக பாஜக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், வெளிப்படையாக அப்படி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு பேசியபடி, தங்கள் கட்சிக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்று சிவசேனா பிடிவாதமாக கேட்டது. பாஜகவோ தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்து விட்டது. மேலும், அப்படியொரு ஒப்பந்தமே போடவில்லை, சிவசேனா பொய் சொல்கிறது என்று பாஜக கூறி விட்டது.
இந்த இழுபறியில் முந்தைய சட்டசபையின் பதவிக்காலம் முடிந்தது. இதற்கிடையே, பாஜகவால் ஆட்சியமைக்காவிட்டால் சிவசேனா ஆட்சியமைக்கத் தயாராக உள்ளதாக அக்கட்சி அறிவித்தது. மேலும், தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி.) தலைவர் சரத்பவாரை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய்ராவத் சந்தித்து பேசினார்.
இதன் தொடர்ச்சியாக, சரத்பவார் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து விட்டு திரும்பினார். அப்போது சிவசேனாவுக்கு என்.சி.பி-காங்கிரஸ் அணி ஆதரவு அளிக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர், எங்களை மக்கள் எதிர்க்கட்சிகளாக தேர்வு செய்திருக்கிறார்கள். அமித்ஷா கெட்டிக்காரர். அவர் சிவசேனாவை சிறப்பாக கையாண்டு விடுவார் என்று சிரித்து கொண்டே கூறினார்.
இதனால், சிவசேனாவுக்கு என்.சி.பி-காங்கிரஸ் ஆதரவு கிடைக்காது என்று பாஜக நினைத்தது. இப்போது பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், வேறு வழியில்லாமல் சிவசேனா வழிக்கு வந்து விடும் என்று எதிர்பார்த்தது. இதைத் தொடர்ந்து, பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் பட்நாவிஸை பதவியேற்க வருமாறு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார்.
ஆனால், அப்போதும் சிவசேனா பணியவில்லை. பாஜகவால் ஆட்சியமைக்க முடியாவிட்டால் சிவசேனா ஆட்சியமைக்கத் தயார். எங்களை கவர்னர் அழைக்க வேண்டும்என்று சிவசேனாவின் சஞ்சய் ராவத் பேட்டி அளித்ததுடன் சரத்பவாரை மீண்டும் சந்தித்தார். இதன்பின், பட்நாவிஸ் கவர்னரை சந்தித்து பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாததால், ஆட்சியமைக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டார்.
இதற்குப் பிறகு, சிவசேனாவுக்கு ஆதரவளிக்க என்.சி.பி.யும், காங்கிரசும் சேர்ந்து ஒரு நிபந்தனை விதித்தன. அதாவது, மத்திய அரசில் இருந்து சிவசேனா விலகி, பாஜக கூட்டணியை முறிக்க வேண்டும். அப்போதுதான், சிவசேனாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றன. வேறு வழியின்றி சிவசேனாவும் தனது ஒரே மத்திய அமைச்சரான அரவிந்த் சாவந்த்தை ராஜினாமா செய்ய வைத்தது.
இதற்கு பின், என்சிபி-காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்து ஆதரவு கடிதம் வந்து விடும் என்று சிவசேனா எதிர்பார்த்தது. ஆனால், இந்துத்துவா கொள்கையுடைய சிவசேனாவுக்கு ஆதரவு அளித்தால், அது எதிர்காலத்தில் காங்கிரசுக்கு மக்கள் செல்வாக்கை பாதிக்குமோ என்று தயக்கம் காட்டியது. இதற்கிடையே, சிவசேனாவுக்கு ஒரு நாள் மட்டும் அவகாசம் அளித்த கவர்னர் கோஷ்யாரி, தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். இன்று(நவ.12) இரவு 8 மணி வரை அவகாசமும் அளித்தார்.
ஆனால், திடீரென கவர்னர் கோஷ்யாரி தனது நிலையை மாற்றிக் கொண்டு, மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்பினார். அதில், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க யாராலும் மெஜாரிட்டியை பிடிக்க முடியவில்லை என்பதால், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.
இதையடுத்து, டெல்லியில் அவசர, அவசரமாக மத்திய அமைச்சரவை பிரதமர் மோடி தலைமையில் கூடியது. அதில் கவர்னரின் அறிக்கையின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கான பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.இதற்கிடையே தங்களுக்கு கவர்னர் போதிய கால அவகாசம் தரவில்லை என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா அவசர மனு தாக்கல் செய்துள்ளது.