ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிடப்படுமா? ராஜேந்திர பாலாஜி தகவல்
ஆவின் பால்பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிட்டு வழங்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் நிர்மல்குமார் வேண்டுகோள் விடுத்தார். இது பற்றி பரிசீலித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவர் நிர்மல் குமார், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், திமுக கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக திருவள்ளுவரின் உண்மை வரலாற்றை மறைத்து தமிழர்களுக்கு பெரும் துரோகம் இழைத்துள்ளது. அத்துடன், திருக்குறளையும், தமிழ் மொழியையும் தி.மு.க.வினர் தங்கள் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.
பிரதமர் மோடி தற்போது தமிழ்மொழி மற்றும் திருக்குறளை உலக அரங்கில் அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்து சென்று தமிழுக்கு பெருமை சேர்த்து வருகிறார். திருக்குறளை மக்கள் மத்தியில் எளிமையாக கொண்டு சேர்க்க பா.ஜ.க. பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறளை அச்சடித்து விநியோகம் செய்வதன் மூலம் ஒவ்வொரு இல்லத்திற்கும் திருக்குறளை எளிமையாக கொண்டுசேர்க்க முடியும். எனவே, ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பதிலில், மிக விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுபற்றி பேசி அவருடைய ஒப்புதலை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.