துப்பாக்கியுடன் போஸ்.. புதுமண தம்பதி கைது
நாகலாந்தில் திருமண வரவேற்பில் ஏகே56 இயந்திர துப்பாக்கிகளுடன் போஸ் கொடுத்த புதுமணத் தம்பதி கைது செய்யப்பட்டனர்.
நாகலாந்தில் அரசை எதிர்த்து பல போராளிக் குழுக்கள் போராடி வருகின்றன. அவற்றுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டாலும் அவ்வப்போது அந்த குழுக்கள் எதிர்ப்பு குரலை ஒலித்து வருகின்றன.
இந்நிலையில், என்.எஸ்.சி.என்(யு) என்ற போராளிக் குழுவின் தலைவர் போகட்டோ கிபா என்பவரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 9ம் தேதியன்று நடைபெற்றது. அதில் மணமகனும், மணமகளும் ஏ.கே.56, எம்.18 ஆகிய இயந்திர துப்பாக்கிகளுடன் போஸ் கொடுத்துள்ளனர். துப்பாக்கிகளுடன் அவர்கள் இருப்பதை பார்த்து வரவேற்பில் கலந்து கொண்டவர்கள் மிரட்சியடைந்தனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. ஏற்கனவே போகட்டோ கிபா ஒரு முறை தன்னை பற்றி அவதூறாக எழுதும் பத்திரிகையாளர்களை கொல்வேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது பெரிய சர்ச்சையானது. இந்நிலையில், இந்த வீடியோ தற்போது நாகலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இந்த வீடியோ நாடு முழுவதுமே சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, போலீசார் அந்த மணமக்களை அழைத்து விசாரணை நடத்தின். இது குறித்து நாகாலாந்து டிஜிபி ஜான்லாங்க் குமெர் கூறுகையில், புதுமணத் தம்பதியை அழைத்து விசாரித்தோம். மணமகன் தனது தந்தையின் பாதுகாவலர்கள் வைத்திருந்த துப்பாக்கிகளை தங்களிடம் கொடுத்ததாகவும், நாங்கள் அதை வைத்து கொண்டு விளையாட்டாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தோம் என்றும் தெரிவித்தார். இருந்தாலும் அவர்களை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்துள்ளோம். ஆயுதங்களை பறிமுதல் செய்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.