ராகுலுக்கு கவனம் தேவை.. சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட்டை தவறாக மேற்கோள்காட்டி பேசியதற்காக ராகுல்காந்தி மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில், ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்து, வழக்கை முடித்தது சுப்ரீம் கோர்ட். பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டினர். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் ரபேல் முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார். அந்த சமயத்தில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் வெளியானதை அடுத்து சுப்ரீம் ேகார்ட் சில கருத்துக்களை தெரிவித்தது. ஆனால், ராகுல்காந்தி அதை தவறாக எடுத்து கொண்டு, ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட்டே கூறி விட்டதாக ஒரு கூட்டத்தில் பேசினார். இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ.க.வைச் சேர்ந்த மீனாட்சி லேகி எம்.பி, சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, தான் தவறுதலாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை மேற்கோள் காட்டிவிட்டதாக வருத்தம் தெரிவித்து ராகுல்காந்தி அபிடவிட் தாக்கல் செய்தார். அதில் திருப்தியடையாத சுப்ரீம் கோர்ட், விரிவான பதிலளிக்குமாறு கூறி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தாக்கல் செய்த பதில் மனுவில், தவறுக்கு மன்னிப்பு கோரி புதிய அபிடவிட் தாக்கல் செய்வதாக கூறியிருந்தார். இதன்பிறகு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்தார்.இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், ராகுல்காந்தி வருங்காலத்தில் மிகவும் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து வழக்கை முடித்து வைத்தனர்.

More News >>