தெலங்கானா பஸ் ஊழியர்கள் 41வது நாளாக ஸ்டிரைக்..

தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 41வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் தலைமையில் டி.ஆர்.எஸ். கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தங்களை அரசு ஊழியர்களாக்குவது உள்பட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிகை் செய்து வருகின்றனர். ஆனால், முக்கிய கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படாததால், அவர்களிடம் அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது.

இதையடுத்து, அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்களில் 50 சதவீத வழித்தடங்களை தனியாருக்கு விட்டு கொடுக்க அரசு முடிவெடுத்தது. மேலும், தனியார் பஸ்களை இயக்க அனுமதியும் அளித்தது. இதனால், அரசு பஸ் ஊழியர்கள் கடும் கோபமடைந்து மேலும் தீவிரமாக போராடினர். அரசும் பிடியை விட்டு கொடுக்காமல் 45 ஆயிரம் பேரை டிஸ்மிஸ் செய்தது.

இது தொடர்பாக, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே சுமுகமான உடன்பாடு காண்பதற்காக சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதிகள் 3 பேர் குழுவை நியமிப்பதாக ஐகோர்ட் கூறியது. ஆனால், அதை தெலங்கானா அரசு ஏற்கவில்லை. அதற்கு தொழிலாளர் சட்டத்தில் இடமில்லை என்று கூறி மறுத்து விட்டது.

இதனால், 41வது நாளாக இன்றும் (நவ.14) போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக் நீடித்து வருகிறது. இதற்கிடையே ஊழியர்களில் 5 பேர் வரை மனஉளைச்சலால் தற்கொலை செய்து கொண்டனர். இது தொழிலாளர்களை மேலும் கோபமடையச் செய்துள்ளது. ஆனாலும், சந்திரசேகர ராவ் அரசு, தனது நிலையில் இருந்து இறங்கி வர மறுத்து விட்டது.

More News >>