சிவசேனாவை சேர்ந்தவரே மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்.. என்.சி.பி. அறிவிப்பு

சிவசேனா கட்சியைச் சேர்ந்தவரே அடுத்த முதல்வர் என்று தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி.) அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அக்டோபரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டின் போது, சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக பாஜக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், தற்போது பாஜக தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்து விட்டது. மேலும், சிவசேனாவிடம் அப்படி ஒப்புக் கொள்ளவே இல்லை என்றும் அக்கட்சியினர் பொய் சொல்லுகிறார்கள் என்றும் பாஜக கூறியது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி முறிந்தது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்க சிவசேனா முயன்று வருகிறது. நேர் எதிர் கொள்கை கொண்ட சிவசேனாவுடன் எப்படி கூட்டணி வைப்பது என்று காங்கிரஸ் தயக்கம் காட்டி வருகிறது. ஆனாலும், காங்கிரஸ் தலைவர்களும், சிவசேனா தலைவர்களும் நேரடியாக சந்தித்து பேசி வருகின்றனர். இதே போல், என்.சி.பி. கட்சித் தலைவர்களிடமும் சிவசேனா தலைவர்கள் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று(நவ.14) கூடி பேசினர். அதற்கு பின்னர், என்.சி.பி. கட்சியின் மும்பை தலைவர் நவாப் மாலிக் கூறுகையில், சிவசேனா கட்சிக்கு பாஜகவுடன் ஏற்பட்ட அவமதிப்பை போக்க வேண்டும். எனவே, அந்த கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டு தருவது என்று முடிவெடுத்துள்ளோம். அடுத்த முதல்வர் சிவசேனாவைச் சேர்ந்தவராகவே இருப்பார். என்.சி.பி. கட்சி, அமைச்சரவையில் இடம் பெறும். காங்கிஸ் இடம் பெறுமா அல்லது வெளியில் இருந்து ஆதரவு தருமா என்பது விரைவில் தெரிய வரும். மூன்று கட்சிகளும் சேர்ந்து குறைந்தபட்ச செயல் திட்டம் ஒன்றை வகுத்து வருகிறோம். அது முடிந்தவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரப்படும் என்றார்.

More News >>