பாண்டே, தோனியின் அதிரடிக்கு பதிலடி கொடுத்த டுமினி, கிளாசன்
டுமினி மற்றும் கிளாசன் அதிரடியால் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வென்றிருந்த நிலையில் நேற்று செஞ்சூரியனில் 2ஆவது டி20 போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். பின்னர் தவான் 24 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி 1 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 31 ரன்களிலும் வெளியேறினார்.
இந்திய அணி 10.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மணீஷ் பாண்டே அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். பின்னர் அவருடன் மகேந்திர சிங் தோனி கைகோர்த்தார். இருவரும் அதிரடியாக ஆடினார்.
மணீஷ் பாண்டே 33 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். அதேபோல் தோனியும் 27 பந்துகளில் அரைச்சதம் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. மணீஷ் பாண்டே 79 ரன்களும், தோனி 52 ரன்களும் குவித்து களத்தில் இருந்தனர்.
பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில், ஸ்மட்ஸ் 2 ரன்களும், ரீஷா ஹெண்ட்ரிக்ஸ் 26 ரன்களும் எடுத்து வெளியேற 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
4 ஓவர்களில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்த யுவேந்திர சாஹல்
இதனால், இந்திய அணியின் கை ஓங்கும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், டுமினி, கிளாசன் இணை அந்த எண்ணத்தை சிதைத்தது. இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை சிண்ணாபின்னமாக்கினர். அற்புதமாக ஆடிய கிளாசன் 22 பந்துகளில் தனது முதல் அரைச்சதத்தை விளாசினார்.
அவருக்கு இணையாக டுமினியும் அடித்து ஆடினார். குறிப்பாக யுவேந்திர சாஹல் பந்துவீச்சு பரிதாபமாக ஆனது. 4 ஓவர்களில் அவர் 64 ரன்களை வாரி வழங்கினார். கிளாசன் 30 பந்துகளில் 69 ரன்கள் குவித்து வெளியேறினார். நேர்த்தியாக ஆடிய டுமினி 38 பந்துகளில் அரைச்சதம் விளாசினார்.
இறுதியில், 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 189 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டுமினி 40 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலை ஆனது. ஹென்ரிச் கிளாசன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.