காவல் துறை கொள்முதலில் ரூ.350 கோடி ஊழல் புகார்.. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை
காவல் துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி ஊழல் நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். தற்போது இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், காவல்துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது தொடர்பாக உள்துறைச் செயலாளர் விசாரிக்க ஆணையிட்டும், இன்னும் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை எந்தவித விசாரணையும் நடத்தாமல் இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி, அதிமுக அரசு ஊழலை ஊறப்போடவும், விசாரணையை முடிந்தவரை தாமதப்படுத்தவும் வெட்கம் ஏதுமின்றி முயற்சி செய்கிறது என்பதை உணர்த்துகிறது.
ஊழல் புகாருக்குள்ளான தொழில்நுட்ப பிரிவு எஸ்.பி.யை அதே பதவியில் வைத்துக் கொண்டு, இந்த ஊழல் தொடர்பான அலுவலகக் கோப்புகளை பத்திரமாக வைத்திருந்த அமைச்சுப் பணியாளர் ராஜாசிங்கை மட்டும் திடீரென்று ராமநாதபுரத்திற்கு மாற்றியிருப்பது ஆதாரங்களை அழிக்கும் முதல்கட்ட முயற்சி என்ற வலுவான சந்தேகம் எழுகிறது. தமிழக காவல்துறையையும் ஊழல் துறையாக அதிமுக அரசு மாற்றி வருவது கண்டனத்திற்குரியது என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், தமிழக தொழில்நுட்ப சேவைகள் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அசோக்குமார்தாஸ் நேற்று(நவ14) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழக காவல் துறையில் ஆப்கோ மற்றும் டி.எம்.ஆர். திட்டங்களை அமல்படுத்துவதற்கான தொழில்நுட்ப கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள், டெண்டர் செயல் முறைகளில் ரூ.350 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும், தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களுக்கான டிஜிட்டல் மொபைல் ரேடியோ திட்ட டெண்டர் நடைமுறைகளை மீறி வி லிங்க் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. அதே சமயம், முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுவது சரியான தகவல் இல்லை.
தற்போது 2 நகரங்களில் ரூ.86.57 கோடிக்கு ஆப்கோ திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது. இத்திட்டம், வி லிங்க் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படவில்லை. 10 மாவட்டங்களுக்கான டி.எம்.ஆர். திட்டங்களுக்கு ரூ.57.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் ரூ.3.49 கோடியில் ஒரு மாவட்டத்துக்கான டெண்டர் மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள மாவட்டங்களுக்கான டி.எம்.ஆர். திட்டங் களின் டெண்டர்கள் முடிவு செய்யப்படவில்லை. டி.எம்.ஆர். மற்றும் ஆப்கோ திட்டங்களில் எந்த ஒப்பந்ததாரருக்கும் பணம் தரப்படவில்லை.
காவல் துறையில் தொழில்நுட்ப கருவிகள், கண்காணிப்பு கேமரா மற்றும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும்போது தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டம்-1998ல் கூறப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது.
தொழில்நுட்ப பிரிவின் மூத்த அதிகாரிகள் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் சில அலுவலர்கள் நடைமுறை தவறுகளில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. எனவே, இதுதொடர்பாக டி.ஜி.பி. திரிபாதியின் பரிந்துரை அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தற்போது அதன் விசாரணை நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.