கல்வி நிறுவனங்களை கருப்பு சிவப்பாக்கியது யார்? பாஜக கேள்வி

கல்வி நிறுவனங்களை கருப்பு சிவப்பாக்கியது யார் என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

சென்னை ஐஐடியில் மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் தற்கொலை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், "கல்வி நிலையங்களைக் காவிமயமாக்குவதைத் தவிர்த்து, நம் தேசியக் கொடியில் உள்ள வண்ணங்களைப் போல, அனைவரையும் சமமான உரிமையுடன் நடத்தும் போக்கு மேம்பட ஆவன செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

மாணவ, மாணவியர்கள் தற்கொலை என்பது தடுக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் கிடையாது. திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட போதெல்லாம், கல்வி நிலையங்களை கருப்பு சிவப்பு மயமாக்கியது திமுக என்று ஸ்டாலின் ஏற்று கொள்கிறாரா?

1972ம் ஆண்டு சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டமளித்ததை எதிர்த்த மறுநாளே, மாணவர் உதயகுமார் தண்ணீர்த் தொட்டியில் பிணமாக மிதந்ததை தமிழகம் இன்றும் மறக்கவில்லை. அந்த மரணத்தின் சாயம், கருப்பு சிவப்பு என்று ஏற்று கொள்கிறாரா ஸ்டாலின்? 2008ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி சென்னை சட்டக் கல்லூரியில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் கருப்புசிவப்பு தான் என்றால் மறுக்க முடியுமா ஸ்டாலினால்? இந்த தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்த உண்மைகளை கண்டறிய வேண்டியது நம் அனைவரது கடமை என்ற போதிலும் உறுதிபடுத்தாத செய்திகளை வைத்து கொண்டு இதற்கு காவி சாயம், பச்சை சாயம் என்றெல்லாம் பூசி மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் செயலில் ஸ்டாலின் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த சில வருடங்களில் திமுகவினருக்கு சொந்தமான கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் நடைபெற்ற பல தற்கொலைகள் குறித்து வாய்மூடி மவுனம் காத்தது ஏன்? அதற்கு கருப்பு சிவப்புதான் காரணம் என்று ஏற்றுக் கொள்கிறாரா ஸ்டாலின்? தமிழகத்தில் பெரிய கட்சி என்று மார்தட்டிக் கொள்ளும் திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பற்ற முறையில், அரசியல் முதிர்ச்சியற்ற வகையில், நாட்டின் முன்னணி கல்வி நிறுவனத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் கொடும் செயலை செய்திருப்பது எதிர்கால மாணவ சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்.

எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டுவது என்பது அரசியல் உள்நோக்கத்தோடு செய்யப்படுகிற விமர்சனம். பாஜகவின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக வதந்திகளையும் பொய் புரட்டுகளையும், அநாகரிகமான சொற்களையும் தரம் தாழ்ந்த முறையில் மதரீதியாக பதட்டத்தை உண்டாக்கும் முயற்சியில் ஸ்டாலினும், இடது சாரிகளும், திருமாவளவனும் விமர்சிப்பதால், இந்த விவகாரத்தில் கருப்பு சிவப்பிற்கு ஏதேனும் தொடர்பிருக்கிறதா? இதன் பின்னணி என்ன ? தவறான தகவல்களை அளித்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் தேவையெனில் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இதுபோன்ற விவகாரங்களில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பண்பாடற்ற அநாகரீகமான செயலில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ஸ்டாலின், திருமாவளவன் மற்றும் கம்ம்யூனிஸ்டுகளே, இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மதவாத அரசியலை அதிகார போதைக்கு ஏங்கி இரு மதங்களுக்கு இடையே பதட்டத்தை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் உங்கள் எண்ணத்தை தடுத்து நிறுத்துவோம். தமிழக அரசு இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் தேவையெனில் இந்த தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். கருப்பு சிவப்பு சாயம் பூசப்படுகிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

More News >>