அதிமுக ஏழைகளின் கட்சி.. அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
அதிமுக ஏழைகளின் கட்சி, திமுக கோடீஸ்வரர்களின் கட்சி என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்த்து, அதிமுக, திமுக உள்பட கட்சிகள், போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்பமனு வாங்கத் தொடங்கியுள்ளன. அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் கேட்பவர்களுக்கு விருப்பமனு விநியோகம் இன்று(நவ.15) தொடங்கியது.
அதிமுகவினர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து நாளை மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். மாநகராட்சி மேயர் பதவிக்கு 25,000 ரூபாயும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,000 ரூபாய் விருப்ப மனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திமுகவில் மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்களிடம் விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 ஆயிரம் வசூலிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், திமுகவினர் தங்கள் ஆட்சியின் சாதனைகளை கூறுவோம் என்று சொல்கின்றனர். ஆனால், 2011ம் ஆண்டு முதல் நாங்கள்தான் ஆட்சியில் உள்ளோம். எங்களின் சாதனைகள், திட்டங்கள் ஏழைகளுக்கு சென்றடைந்துள்ளன. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார்.
திமுகவில் மேயர் பதவிக்கு விருப்பமனு கட்டணம் ரூ.50 ஆயிரம் என்று நிர்ணயித்தது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஏழைகளின் கட்சி; திமுக கோடீஸ்வர கட்சி என்று பதிலளித்தாார்.