உணவே மருந்து... நமது பாரம்பரியம்! - பகுதி 2

சென்ற பகுதியில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என தமிழன் நிலத்தை இயற்கை சார்ந்து பிரித்து வைத்ததாகக் கண்டோம். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய உணவு, கடவுள், மிருகம், பறவை என எல்லாவற்றையும் தெரிந்து வைத்தான்.

எல்லாம் பள்ளி நாட்களில் படித்தது என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. உங்கள் தமிழ் வாத்தியார் பெயரை காப்பாற்ற வேண்டுமென்றால், எங்கே குறிஞ்சி நிலக் கடவுள் யாரென்று சொல்லுங்கள்? என்ன சார் இது? நம் முப்பாட்டன் முருகனைத் தெரியாதா என்கிறீர்களா? சரி குறிஞ்சி நில உணவு எது?... சரி நானே சொல்லிவிடுகிறேன்.

“தேனும் தினைமாவும்”தான் அது. இதில் தினை என்றால் பலருக்கு என்னவென்றே தெரியாது. தினை மட்டுமல்ல சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி இவையெல்லாம் சத்து நிறைந்த சிறுதானியங்கள். உண்மையில் அவைகளை சிறுதானிங்கள் என்று சொல்வதே தவறு. செல்வம் அல்லது லட்சுமி என்று பொருள்படும் ஸ்ரீ தானிங்கள் என்று சொல்வதே சிறப்பு. ஏனெனில், ஒவ்வொரு தானியமும் அவ்வளவு ஊட்டச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளன.

எனவேதான் முருகன் கோவில்களில் இன்றும் தேனும் தினைமாவும் கலந்து படைப்பதை வழிபாடாகப் பலரும் பின்பற்றுகின்றனர். அவ்வையார்கூட “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்”என்று அன்றே பாடி வைத்தார். (வழுதுணங்காய் - கத்தரிக்காய்; வாட்டு - பொரியல்).

இந்த ஸ்ரீ தானியங்கள் பற்றி எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். முதலில் இவற்றின் சாகுபடி முறைகளைப் பற்றி பார்ப்போம். அதற்கு முன்பு மற்ற Millet தானியங்களான சோளம், கம்பு, ராகி பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். இவையெல்லாம் குறைந்த நீர் அல்லது நீர் வசதியே இல்லாத மானாவாரி நிலத்தில் விளைபவை. ஆனால், மேலே சொன்ன minor millets அல்லது ஸ்ரீ தானியங்களுக்கு சோளம், கம்பு, ராகிக்கு தேவைப்படும் நீர் கூட தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால், பனிவரகு பனியின் ஈரப்பதத்திலேயே வளர்ந்துவிடும் என்று அனுபவ விவசாயிகள் சொல்கிறார்கள்.

நீர் மட்டுமல்ல மற்ற விலை மிகுந்த இடு பொருட்களான கடை உரங்களோ, பூச்சிக் கொல்லிகளோ கூட இவற்றிற்கு தேவையில்லை. எனவே, இந்தக் காலத்து மொழியில் சொல்வதென்றால், They are organic by default இதனால் மண்வளமும் பாதுகாக்கப்படுகின்றது. விவசாயிக்கும் செலவு குறைகிறது. சாப்பிடும் மக்களுக்கும் ஆரோக்கியம் மிகுகிறது.

இரண்டாவது, அதிலுள்ள சத்துக்கள் இப்போதும் நாம் அதிகமாக சாப்பிடும் அரிசி, கோதுமையைவிட பல மடங்கு இவை சத்து மிகுந்தவை. முக்கியமாக நார்ச்சத்தை எடுத்துக்கொண்டால் அரிசியில் 0.2%, கோதுமை 1%, ஆனால் ஸ்ரீ தானியங்களில் குறைந்தது 8 முதல் 12%. மற்ற சத்து நிலவரங்களை தனிப் பெட்டியில் பார்க்கவும்.

Reference: Dr Khader, Food and nutrient expert, Mysore

மூன்றாவது, இவற்றின் சுவை, நாம் ஏற்கெனவே பார்த்தமாதிரி, தேனும் தினைமாவும் கலந்து நீங்கள் சுவைத்துப் பார்த்தால் உங்களுக்கே தெரியும். தவிர, அவ்வையாரே சொல்லிவிட்டார், வரகரிசியும் கத்திரிக்காயும் best combination என்று. பொங்கல், இட்லி, தோசை, சாதம் என்று எந்த வகையான உணவையும் நீங்கள் ஸ்ரீ தானியங்களைக் கொண்டு சமைக்கலாம். சுவையாக இருக்கும். இன்னும் விசேசம் என்னவென்றால், இவை கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறையும். இரண்டாவது நாள் இருந்தாலும் மோர் விட்டு உண்ணலாம். சுவை அலாதி. தவிர, இவை மருத்துவ குணம் மிக்க தானியங்கள் என்றும் சொல்லலாம்.

இந்தக் காலத்து இளைஞர், இளைஞிகள் விரும்பிச் சாப்பிடும் பீட்சா, பர்கர், மற்றும் கோலா உணவுகள் கண்ணுக்கும் வாய்க்கும் வேண்டுமென்றால் சுவையாக இருக்கலாம் ஆனால், வயிற்றுக்கு பயன் மிகுந்த உணவு ஸ்ரீ தானியங்களே. மேற்கண்ட துரித உணவுகளில் மைதா, உப்பு சர்க்கரையே மிகுந்துள்ளன. அவை நமது வைரமுத்து அவர்கள் சொன்ன சுடுகாட்டுத் தேரின் இரு சக்கரங்களான மலச்சிக்கலையும், அஜீரணத்தையும் உண்டு செய்பன. ஆனால், இவற்றை முறியடிக்கும் நார்ச்சத்தை அதிக அளவு கொண்ட மருத்துவ உணவுகள்தான் நமது ஸ்ரீ தானியங்கள்.

அரிசியிலும் கோதுமையிலும் அதிக அளவு உள்ள கார்போ ஹைட்ரேட் சத்துடன், எல்லாவித புரத, விட்டமின் சத்துக்களையும் ஸ்ரீ தானியங்கள் கொண்டுள்ளன. எனவே, உணவே மருந்து என்று யாராவது எண்ணி அதன்படி வாழவேண்டுமெனில், அவர்கள் கட்டாயமாக இந்த பாரம்பரிய உணவுகளான ஸ்ரீ தானியங்களை பெருமளவு தனது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் இன்று பெரும்பாலான BP, சர்க்கரை வியாதிக்காரர்களைப் போல மருந்தே உணவு என்ற நிலைக்கு ஆளாக வேண்டியதுதான்.

தொடரும்....

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க க்ளிக் செய்யவும்,

உழவு அவனுக்குத் தொழில் அல்ல வாழ்க்கைமுறை... நமது பாரம்பரியம்! - பகுதி 1

“மண் பயனுற வேண்டும்” - நமது பாரம்பரியம் பகுதி - 3

“கேடில் விழுச்செல்வம்...” மாடு! - நமது பாரம்பரியம் பகுதி - 4

மரம்... பூமியின் நுரையீரல் - நமது பாரம்பரியம் பகுதி 5

நீரின்றி அமையாது உலகு... நமது பாரம்பரியம் - பாகம் 6

பகுத்துண்டு பல்லுயிர் போற்றல்... நமது பாரம்பரியம் - பாகம் 7

- முனைவர் நா.லோகானந்தன்

இந்தக் கட்டுரையின் ஆசிரியர், முனைவர் நா.லோகானந்தன் கர்நாடக மாநிலத்தின் தும்கூரிலுள்ள வேளாண் அறிவியல் மையத்தின் தலைவராகப் பணியாற்றி வருபவர். “இயற்கை வேளாண்மையின் சமுதாய மற்றும் சூழலியல் சார்ந்த தாக்கம்” என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு, புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவரின் சொந்த ஊர் கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர். மக்களின் நலனிலும் ஆரோக்கியத்திலும் மிகுந்த அக்கறை கொள்பவர்.

அவரிடம் உங்களுக்குப் பிடித்தவேலைகள் எவையென்று கேட்டால், “மண்ணையும், மரத்தையும், மாட்டையும் நேசித்தல்” என்றும் “மற்ற நேரத்தில் பயனுள்ள பல புத்தகங்களை வாசித்தல்..” என்றும் சிரித்த முகத்துடன் பதிலளிக்கிறார். உடலளவிலும் மனதளவிலும் இன்று நாம் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். இதற்கெல்லாம் காரணம் நமது பாரம்பரியத்தை நம் காலத்தோடு இணைத்து வாழாமல் போனதே எனக் கருதுபவர். அந்தவகையில் நமது பாரம்பரியத்தை பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும், அதை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் தொடர்ந்து எழுதிவருகிறார். படித்து நாம் பயன்பெறுவோம்.

More News >>