பள்ளி மாணவர்களிடம் கூல் லிப் போதை பை.. ராமதாஸ் அதிர்ச்சி தகவல்..

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் சட்டவிரோதமாக போதை புகையிலை பொருட்கள் விற்பது மிகுந்த கவலையளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.அவர் நேற்று(நவ.15) வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பள்ளி மாணவர்களை ஒரு கும்பல் போதைப் புகையிலை பயன்பாட்டுக்கு அடிமையாக்கி வருகிறது. இதை தடுப்பதற்கு பல முறை வலியுறுத்தியும் பள்ளிகளில் புகையிலை புழக்கம் நீடிப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

கூல் லிப் (Cool Lip) என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் வடிகட்டியுடன் கூடிய போதைப் புகையிலை தான் மாணவர்களை சீரழிக்கும் தீயசக்தியாக உருவெடுத்திருக்கிறது. கூல் லிப் புகையிலை தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

தில்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்படும் கூல் லிப் புகையிலை கர்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்டு தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. இப்போது பள்ளிகளை முக்கிய சந்தையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. மாணவர்களையே விற்பனை முகவர்களாக மாற்றியிருக்கின்றனர்.

வழக்கமான போதைப் பொருட்களுக்கு கல்லூரி மாணவர்கள் எவ்வாறு அடிமையாக்கப்படுவார்களோ, அதேபோல்தான் பள்ளி மாணவர்களும் கூல் லிப் போதைப் புகையிலைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு முதலில் சில நாட்களுக்கு கூல் லிப் போதைப் புகையிலை இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் போதைப் புகையிலைக்கு அடிமையான பின்னர் அவர்கள் ஒரு பாக்கெட்டுக்கு ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும்; இல்லாவிட்டால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை பிடித்து தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இப்படியாக இந்த போதைக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அடிமையாகின்றனர்.

கூல் லிப் என்பது சற்று மாறுபட்ட வடிவத்தில் கிடைக்கும் மெல்லும் புகையிலை ஆகும். வடிகட்டி பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கூல் லிப் புகையிலையை வாயில் போட்டு, ஒரு ஓரத்தில் அடக்கி வைத்துக் கொண்டால், அப்புகையிலை பட்டதும் சுரக்கும் உமிழ்நீர் ஒருவகையான போதையை ஏற்படுத்துகிறது. அதற்கு அடிமையாகும் மாணவர்களும், இளைஞர்களும் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றனர்.

சென்னையில் பல பள்ளிகளில் பாடவேளைகளிலேயே மாணவர்கள் இந்த புகையிலையை பயன்படுத்தி மயங்கிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நேரங்களில் இந்த புகையிலை வாய் நாற்றத்தைப் போக்கும் வாசனைப் பொருள் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படுவதால், இதற்கு மாணவர்கள் மிகவும் எளிதாக அடிமையாகின்றனர். இது மிக மிக ஆபத்தான போக்கு ஆகும்.

புகைக்கும் புகையிலை, மெல்லும் புகையிலை ஆகியவற்றை விட கூல் லிப் புகையிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நோய்கள் தாக்கும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். வழக்கமான புகையிலைப் பொருட்கள் இளைஞர்களை குறி வைக்கும் நிலையில், கூல் லிப் மாணவர்களை குறி வைப்பது தான் மிகவும் கவலை அளிக்கிறது. பள்ளிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று விதிகள் உள்ள நிலையில், கூல் லிப் போதைப் புகையிலை வகுப்பறை வரை வந்து பரபரப்பாக விற்பனையாகிறது.

மாணவர்களின் எதிர்காலம் அவர்களின் பதின் வயது பழக்க வழக்கங்களை பொறுத்தே அமையும். சரியாக பதின் வயது தொடங்கும் பருவத்தில் மாணவர்கள் கூல் லிப் புகையிலைக்கு அடிமையானால் அடுத்தடுத்தக் கட்டங்களில் இன்னும் மோசமான போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை இழந்து விடக்கூடும். இந்த ஆபத்திலிருந்து மாணவர்களைக் காக்கும் கடமை தமிழக அரசுக்கு உண்டு. எனவே, தமிழ்நாட்டில் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கூல் லிப் போதைப் புகையிலை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே தடை செய்யப்பட்ட குட்கா விற்பதற்கு சுகாதாரத் துறை அமைச்சரும், டிஜிபியுமே லஞ்சம் வாங்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகளே குற்றம்சாட்டினர். இந்த வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் இன்னும் மோசமான போதைப் புகையிலை விற்கப்படுவதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

வழக்கமாக, இது போன்ற விஷயங்களில் ஆளும்கட்சியை மிக கடுமையாக தாக்கும் ராமதாஸ், இப்போது அதிமுக கூட்டணியில் இருப்பதால், இந்த முறை அரசை மிக மென்மையாக கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Links:-

இந்தியாவில் பள்ளிகள் அதிகம்....ஆனால் கல்வியின் தரம் அடிமட்டம் -சர்வே ரிப்போர்ட்

சீனாவை விட மூன்று மடங்கு இந்தியாவில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், நம்நாட்டின் கல்வியின் தரம் பின்தங்கியுள்ளதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது.

இ-சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்குக் கேடா?

புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவதற்காக என்று இ-சிகரெட்டுக்கு பழகும் சிலர், பின்னர் சிகரெட், இ-சிகரெட் இரண்டையும் பயன்படுத்தத் தொடங்கி விடுகின்றனர். சட்டிக்கு தப்பி அடுப்புக்குள் விழுந்தது போன்று சிகரெட் புகைப்பதை விடுகிறேன் என்று இ-சிகரெட்டுக்கும் சேர்த்தே இளைஞர்கள் அடிமையாகிவிடுகின்றனர்.

தந்தையின் புகைப்பழக்கத்தால் மலடாகும் மகன்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மனித உடலுக்கு கேடு உண்டாக்கி உள்ளுறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக நாசமாக்கி கடைசியில் உயிரை பறிக்கும் தீய பழக்கங்களில் மது அருந்துவதும், புகைப்பிடிப்பதும் முக்கிய பங்காற்றுகின்றன.

பாதை மாற்றும் போதை பழக்கம் (ஜூன் 26 - சர்வதேச போதை மருந்து எதிர்ப்பு நாள்)

மதுப்பழக்கம், ஈரல், சிறுநீரகம், கணையம், நினைவுத்திறன் ஆகியவற்றை பாதிப்பதோடு நடுக்கம், மனநிலை பாதிப்பு, நரம்பியல் பாதிப்பு ஆகியவற்றையும் கொண்டு வருகிறது.

பிஸி லைஃப்பில் ஃபிட்னஸ்ஸை தக்க வைப்பது எப்படி?

'உடல் ஆரோக்கியத்திற்காக என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டால், 'அதுக்கெல்லாம் எங்கே நேரமிருக்கு?' என்பதே பெரும்பாலும் அனைவரின் பதிலாக இருக்கிறது. யாருக்கும் உடற்பயிற்சி செய்யவோ, உணவில் கவனம் செலுத்தி சாப்பிடவோ நேரமிருப்பதில்லை.

More News >>