இலங்கை அதிபர் தேர்தல்.. விறுவிறுப்பான வாக்குப்பதிவு நாளை முடிவு தெரியும்

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(நவ.16) காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

இலங்கையில் அதிபர் சிறிசேனா பதவிக்காலம் ஜனவரி 9ம் தேதி முடிவடைகிறது. புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 12,600 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்பே பல வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருந்தனர். மாலை 5 மணி வரை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும்.

இந்த தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே(70), ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணசிங்கே பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா போட்டியிடுகின்றனர். மொத்தம் 35 பேர் வரை போட்டியிட்டாலும், இந்த இருவருக்கு இடையில்தான் நேரடி போட்டி நிலவுகிறது.

மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது ராணுவச் செயலாளராக இருந்தவர் கோத்தபய ராஜபக்சே. அப்போதுதான், விடுதலைப் புலிகளுடன் இறுதிப் போர் நடைபெற்றது. அந்த போரில் ராணுவத்தை வழிநடத்திய கோத்தபய ராஜபக்சே, அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைப் பற்றி கவலைப்படவே இல்லை. எப்படியாவது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கொன்று விட வேண்டுமென்று இறுதிவரை நின்றார்.

இதனால், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். ஆனாலும், 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த விடுதலைப் புலிகளின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்ததால், சிங்களர்களிடையே ராஜபக்சேவுக்கு ஆதரவு இருக்கிறது.

மேலும், கடந்த ஏப்ரலில் இலங்கை சர்ச்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 269 பேர் வரை கொல்லப்பட்டனர். இதனால், தீவிரவாதத்திற்கு எதிராக மக்கள் இருப்பது கோத்தபயவுக்கு சாதகமாக அமையும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததுமே வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். அதனால், நாளை(நவ.17) முடிவு தெரிந்து விடும். தேர்தலை கண்காணிக்க வெளிநாடுகளில் இருந்து 150 பேர் வரை பார்வையாளர்களாக வந்துள்ளனர்.

More News >>