பாத்திமாவின் மரணத்தில் உண்மைகள் வெளிவரும்.. தந்தை அப்துல் லத்தீப் நம்பிக்கை..
ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், அவரது தந்தையிடம் விசாரித்தனர். அவரிடம் உள்ள சில தடயங்களை கேட்டுள்ளனர்.
கேரள மாநிலம், கொல்லத்தை அடுத்துள்ள கிளி கொல்லூா் பிரியதா்ஷினி நகரைச் சோ்ந்தவர் அப்துல் லத்தீப். இவரது மகள் பாத்திமா லத்தீப், சென்னை ஐ.ஐ.டி.யில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தாா். பாத்திமா தனது விடுதி அறையில் கடந்த 8ம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து கோட்டூா்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த நிலையில், பாத்திமாவின் செல்போனில் தனது தற்கொலைக்கு ஐ.ஐ.டி. இணைப் பேராசிரியா் ஒருவா் காரணம் என்றும், மேலும் 2 பேராசிரியா்கள் தன்னை அவமானப் படுத்தியதாகவும் பதிவு செய்திருந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டினா். இதனால், பாத்திமா மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் புகார் கூறினர். மரணம் குறித்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கடந்த 14ம் தேதியே ஐ.ஐ.டி. வளாகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டாா். பின்னா் அவா், மத்தியக் குற்றப்பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு வழக்கின் விசாரணையை மாற்றி உத்தரவிட்டாா்.
இதைத் தொடர்ந்து, பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப்பிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணை நடத்தினர். ஐஐடி வளாகத்தில் நடந்தவை மற்றும் பேராசிரியர்கள் குறித்து பாத்திமா முன்பு என்ன தகவல்களை பெற்றோரிடம் தெரிவித்திருந்தார் என்று அவரிடம் விசாரிக்கப்பட்டது. மேலும், பாத்திமா தொடர்பான சில ஆவண சாட்சியங்களையும் கொடுக்குமாறு கேட்டனர்.
இந்த விசாரணைக்கு பின்னர், அப்துல் லத்தீப் கூறுகையில், போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் அளித்துள்ளோம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். எனவே, எனது மகள் பாத்திமாவின் மரணத்தில் உள்ள உண்மைகள் வெளியே வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார்.