எடப்பாடி பழனிசாமியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு.. கூட்டணியில் மாற்றமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று(நவ.17) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்து வி.சி.க., அதிமுக கூட்டணிக்கு மாறுமா என்ற அரசியல் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றிருந்தது. அதன் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆகினர். இதன்பின், விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்றத் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது விக்கிரவாண்டியில் அதிகமான வன்னியர்கள் இருப்பதால், அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு, கோவிந்தசாமி மணிமண்டபம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் அளித்தார். இது வி.சி.க.வுக்கு நெருடலைத் தந்தது. அக்கட்சி அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலையில் திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

பின்னர், செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் துணை தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முதலமைச்சரிடம் முன்வைத்தேன்.

இலங்கையில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றிருப்பது அங்கு வசிக்கும் தமிழக மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

திருமாவளவன் இதற்கு முன்பு முதலமைச்சரை இது போன்ற கோரிக்கைகளுக்காக சந்திக்கவில்லை. எனவே, இதில் அரசியல் இருக்குமோ என்று பேசப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு கோரிக்கையை திருமாவளவன் முன்வைப்பதால், தேர்தலை தள்ளிப் போடுவதற்கான உத்தியாக இருக்குமோ என்றும் பேசப்படுகிறது.

More News >>