47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு..
இந்தியாவின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று காலையில் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.
முன்னதாக, அவர் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியான சரத் அர்விந்த் பாப்டேவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை அனுப்பினார். இதை ஏற்று, நாட்டின் 47வது தலைமை நீதிபதியாக சரத் அர்விந்த் பாப்டேவை நியமித்து ஜனாதிபதி ராம்னாத் கோவிந்த அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, நாட்டின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று காலையில் பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று, பம்பாய் ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் கூட வழக்கறிஞர்கள்தான். கடந்த 2000ம் ஆண்டில் பாப்டே, மத்தியப் பிரதேச ஐகோர்ட்டில் நீதிபதியாக பொறுப்பேற்றார். கடைசியாக அங்கு தலைமை நீதிபதியாக பணியாற்றிய போது, 2012ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி பாப்டே பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு கூறியுள்ளார். அயோத்தி வழக்கை விசாரித்த முந்தைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்விலும் இடம் பெற்றிருந்தார்.