மக்கள் நீதி மய்யத்தின் 2வது பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெறும்: கமல் அறிவிப்பு

சென்னை: மதுரையில் நடத்திய பொதுக்கூட்டத்தை தொடர்ந்து, அடுத்ததாக வரும் ஏப்ரல் 4ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்ற அவதாரங்களில் இருந்து அரசியலுக்கு முழுவீச்சில் களம் இறங்கி இருக்கும் கமல்ஹாசன் நேற்று ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

இதைதொடர்ந்து, அப்துல் கலாம் படித்த பள்ளியை வெளியில் நின்றபடி பார்த்த கமல் பின்பு, மீனவர பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்கள் சந்தித்த அத்தனை கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இதைதொடர்ந்து, நேற்று மாலை 6.30 மணிக்கு மேல் மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி, விவசாயப் பிரதிநிதி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தின்போது, கட்சிக் கொடியை ஏற்றிய கமல், கட்சியின் பெயரை மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார். பின்னர், பொது மக்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல் கூறுகையில், “மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி நடைபெறும். கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது, நிர்வாகிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்” என்றார்.

More News >>