தகவல் ஆணையர் தேர்வு கமிட்டி.. ஸ்டாலின் புறக்கணிப்பு..
தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டிய கூட்டத்தை ஸ்டாலின் புறக்கணித்தார்.
தமிழக தகவல் ஆணையர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுநனர்களை அமர்த்தலாம். ஆனால், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் ஆட்சியில், தங்களுக்கு சாதகமாக செயல்பட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ஓய்வுக்கு பிறகு கொடுக்கப்படும் பரிசாக இந்த பதவியை வழங்கி வருகின்றன. அப்படி பதவிக்கு வருபவர்கள் வழக்கம் போல், மக்களை பொருட்படுத்தாமல் அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
இந்த வரிசையில், காலியாக உள்ள தலைமை தகவல் ஆணையர் பதவியை நிரப்புவதற்கான தேர்வு கமிட்டி கூட்டம் இன்று(நவ.18) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கு திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்திருந்தனர். இந்த கமிட்டியில் முதலமைச்சர், பணியாளர் நலன் துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மட்டுமே இருப்பார்கள். மெஜாரிட்டி அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்பதால், ஆளும்கட்சி முடிவு செய்தவரே நியமிக்கப்படுவார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த தேர்வு கமிட்டிக் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமிழக பணியாளர் நலன் துறை செயலாளர் ஸ்வர்ணாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள தலைமைத் தகவல் ஆணையர் பதவியை நியமனம் செய்து நிரப்புவதற்கான பரிந்துரையை மாநில ஆளுநருக்கு அனுப்ப 18.11.2019 அன்று முதலமைச்சர் தலைமையில் தெரிவுக்குழுக் கூட்டம் நடைபெறுவதாகவும், அக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ள கடிதம் கிடைக்கப் பெற்றேன்.
அக்கடிதத்தில், தேடுதல் குழு அமைக்கப்பட்டதாகவும், அதன் பரிந்துரை தெரிவுக்குழுக் கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கு எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள்? அவர்களின் “பயோ டேட்டா ” விவரங்கள் உள்ளிட்ட எந்தத் தகவல்களும் கடிதத்துடன் இணைக்கப்படவில்லை.
மிகவும் அவசியமான மேற்கண்ட அடிப்படைத் தகவல்களே, கடிதத்தில் இணைக்கப்படாததால், தேடுதல் குழுவின் பரிந்துரையினை ஆழ்ந்து பரிசீலனை செய்து, தெரிவுக்குழு உறுப்பினர் என்ற முறையில் ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவிக்கும் வாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தவர்களின் விவரங்களையே கொடுக்காமல் கூட்டத்தை நடத்துவதால் – ஒளிவு மறைவற்ற வெளிப்படையான ஒரு தேர்வினை நடத்துவதற்கு அரசு தயாராக இல்லை என்பதும், முன்கூட்டியே “மாநில தலைமை தகவல் ஆணையர்” யார் என்பதை முடிவு செய்து விட்டு, பெயரளவிற்கு இந்தத் தெரிவுக்குழுக் கூட்டத்தை நடத்துவதாக நான் கருதுகிறேன்.
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டும் பதவியில் அமரும் ஒரு மாநில தலைமை தகவல் ஆணையரைத் தேர்வு செய்யும் இந்த நடைமுறை எவ்விதத்திலும் ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்பது மட்டுமின்றி - தமிழக அரசில் பரந்து விரிந்து கிடக்கும் ஊழல் தொடர்பான முக்கிய விவரங்களை மூடி மறைப்பதற்கான முயற்சியில் அரசு துவக்கத்திலேயே ஈடுபடுகிறது என்று எண்ணுகிறேன்.
ஆகவே வெளிப்படைத்தன்மை துளியும் இல்லாத மேற்கண்ட பொருள் குறித்த தெரிவுக்குழு கூட்டத்தில், நான் பங்கேற்பது பொருத்தமாக இருக்காது என்று தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.