காவிரி பிரச்சனையை பேசி தீர்க்க முடியுமா? - கமல்ஹாசனுக்கு பதிலடி
காவிரி நதிநீர் பிரச்சனையை குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கமலஹாசன் கூறியதற்கு சிபிஐஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள பாலகிருஷ்ணன், “அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கமலஹாசன் கூறியிருக்கிறார். இது காவிரிப் பிரச்சனைக்கு பொருந்தாது.
கடந்த காலங்களில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் சுமூகத் தீர்வு ஏற்படாத நிலையில்தான் நம்முடைய வற்புறுத்தல்களாலும் போராட்டங்களாலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படியும் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின் மீது மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமலாக்க போராட வேண்டிய நேரத்தில், அதற்காக அனைத்து கட்சி கூட்டம் தமிழக அரசு சார்பில் நடைபெற இருக்கிறபோது மதுரையில் பேசிய கமலஹாசன் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வற்புறுத்துவது தமிழக நலனை காவு கொடுப்பதாக அமையும் என்று கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் விவசாய சங்கத்தின் தலைவராக பதவி வகித்துள்ளார். அப்போது காவேரி நீர் பிரச்சனையை குறித்து பல போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.