ரீல் தலைவர்கள் மத்தியில் ரியல் தலைவர் எடப்பாடி.. ரஜினிக்கு அதிமுக பதிலடி
ரீல் தலைவர்கள் மத்தியில் ரியல் தலைவர் எடப்பாடியார் என்று ரஜினிக்கு அதிமுக நாளேடு பதிலடி கொடுத்துள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மற்றும் அவரது 60 ஆண்டு கலைப் பயணத்தை கொண்டாடும் வகையில், உங்கள் நான் என்ற இசை நிகழ்ச்சி, சென்னையில் நவ.17ம் தேதி நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசுகையில், எல்லோர் வாழ்க்கையிலும் அற்புதங்கள் நிகழும். 2 ஆண்டுகளுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.
ஆனால், அவர் முதல்வரானார். அதுக்கு அப்புறம் அவருடைய ஆட்சி 20 நாள் தாங்காது, ஒரு மாசம் தாங்காது, மேக்ஸிமம் நாலு மாசம், அஞ்சு மாசத்துல கவிழ்ந்துடும்னு சொல்லாத ஆளே இல்லை. ஆனால், அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழவில்லை. நேற்றும் அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம் அற்புதம் நடந்து கொண்டிருக்கிறது. நாளைக்கும் நடக்கும் என்று கூறினார். அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி பேசினாரா அல்லது அவர் பதவியில் நீடிப்பதே அதிசயம் என்று கிண்டலாக பேசினாரா என்று தொலைக்காட்சிகளில் விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ரஜினி பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக கட்சி நாளேடான நமது அம்மா நாளிதழில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அதில், எடப்பாடியார் ஆட்சி நான்கு, ஐந்து மாதங்கள்கூட தாங்காது என்றார்கள். ஆனால் இன்று வரை சிறப்பாக நீடிக்கிறது. இதுபோன்ற அதிசயம் நாளையும் நிகழும் என ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.வினா குறிப்புகளை வியப்புக் குறிகளாக மாற்றி கேள்விகளையும், கேலிகளையும் ஆச்சர்யங்களாக்கி எடப்பாடி நடத்துகிற நல்லாட்சி 2021-ம் தொடரும் என்பதைத்தான் நாளைக்கும் நடக்கப் போகிற அதிசயம் என்பதாக சூசக ஜோதிடத்தை சூப்பர் ஸ்டார் சொல்லியிருக்கிறார் போலும்.
மொத்தத்தில் முதலமைச்சர் பதவி என்பது தான் எடுக்கும் சினிமாக்களில் முதல் சீனில் ஆசைப்பட்டு மூன்றாவது காட்சியிலேயே கைக்கு எட்டிவிடுகிற கற்பனை நாற்காலிகள் அல்ல என்பதனை கமல்ஹாசனுக்கு, ரஜினி மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கும் மறைமுக அறிவுரையாகவே இக்கருத்து தோன்றுகிறது.
கூடவே, ``தான் முதலமைச்சர் ஆவேன் என்று எடப்படியார் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்" என்றும் சொல்லியிருக்கிறார் சூப்பர் ஸ்டார். உண்மைதான் உச்ச நட்சத்திரமே! கண்டக்டராக வாழ்க்கையைத் தொடங்கிய நீங்களும் கன்னித்தமிழ் பூமியின் சூப்பர் ஸ்டாராவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள்.
ஆனாலும் காலம் கொடுக்கும் வாய்ப்பை கண்ணியம் குன்றாத கடுமையான உழைப்பால் தமதாக்கி கொள்பவர்கள்தான் தலைவர்களாக, அறிஞர்களாக தடம் பதித்து உலக சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள்.
அப்படித்தான் எங்கள் எடப்பாடியாரும் படிப்படியாய் உழைத்து தான் கொண்ட இயக்கத்தின் மீது குன்றாத விசுவாசத்தை பதித்து, சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக, அதன் பிறகு இன்று தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்து ஒரு தொண்டனாலும் தலைவனாக முடியும், தூய தமிழ் உலகை ஆளுகிற முதல்வனாக முடியும் என நிரூபித்திருக்கிறார்.
இது, ஒரு சினிமாவில் நடித்து விட்டு, மறு சினிமா வாய்ப்பு வருவதற்குள் முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் என்பதை உணர்த்துகிறது வரலாறு.
இதனை இலைமறை காயாக சுட்டி காட்டியிருக்கிறது உங்கள் பேச்சு அப்படித்தானே. எப்படியாயினும் மாற்றாரும் போற்றும் சாதனை சரித்திரத்தை கழகம் நாளையும் படைக்கும். நீங்கள் சுட்டி காட்டுகிற அதிசயம் இதுதான் என்பதை கல்வெட்டு சாட்சியாய் உரைக்கும் என்று எழுதப்பட்டிருக்கிறது.