ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதிலளிக்க மறுத்த ரஜினி.. கமலுடன் சேருவதாக அறிவிப்பு..

அரசியலில் கமலுடன் இணைந்து செயல்பட ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு கண்டனம் தெரிவித்த துணைமுதல்வருக்கு பதிலளிக்க அவர் மறுத்து விட்டார்.

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மற்றும் அவரது 60 ஆண்டு கலைப் பயணத்தை கொண்டாடும் வகையில், உங்கள் நான் என்ற இசை நிகழ்ச்சி, சென்னையில் நவ.17ம் தேதி நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசுகையில், எல்லாருடைய வாழ்க்கையிலும் அற்புதங்கள் நடக்கும். 2 ஆண்டுகளுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி, தான் முதலமைச்சர் ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

ஆனால், அவர் முதலமைச்சரானார். அதற்கு பிறகு, அவருடைய ஆட்சி 20 நாள் தாங்காது, ஒரு மாசம் தாங்காது, மேக்ஸிமம் நாலு மாசம், அஞ்சு மாசத்துல கவிழ்ந்துடும்னு சொல்லாத ஆளே இல்லை. ஆனால், அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழவில்லை. நேற்றும் அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம் அற்புதம் நடந்து கொண்டிருக்கிறது. நாளைக்கும் நடக்கும் என்று கூறினார்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு சென்று விட்டு திரும்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ரஜினி பேசியது பற்றி கருத்து கேட்டனர். அதற்கு அவர், எடப்பாடி முதல்வரானது அதிசயம் என்று ரஜினி பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை மக்கள் இயக்கமாகத்தான் கட்டியெழுப்பினர். எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் கூறினார்.

இதன் பின்னர், கோவா செல்லும் போது சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, அவரிடம் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் குறித்து கேட்டனர். அதற்கு அவர், துணைமுதல்வர் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து, அதற்கு நான் பதில் கருத்து கூற விரும்பவில்லை” என்றார். மேலும், மக்களின் மேம்பாட்டுக்காக தேவைப்பட்டால் நானும், கமலும் சேர்ந்து பணியாற்றுவோம் என்றும் தெரிவித்தார்.

More News >>