அவசியம் ஏற்பட்டால் ரஜினியுடன் சேருவேன்.. கமல் அரசியல் பேட்டி...
அரசியலில் அவசியம் ஏற்பட்டால், ரஜினியுடன் கைகோர்ப்பேன் என்று கமல் கூறியுள்ளார்.
கமலின் கலைச்சேவையை பாராட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை ஒடிசா மாநிலத்தின் செஞ்சுரியன் பல்கலைக்கழகம் வழங்கியது. பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், கமலுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். முன்னதாக, புவனேஸ்வரில் நவீன் பட்நாயக்கை அவரது இல்லத்தில் கமல் சந்தித்து பேசினார்.
ஒடிசாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்று சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், எனக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான். நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். இப்போதைக்கு வேலைதான் முக்கியம் என்றார். அவரிடம், அரசியலில் ரஜினியுடன் சேருவீர்களா? என்று கேட்டதற்கு, மக்களின் மேம்பாட்டுக்காக தேவைப்பட்டால் நாங்கள் சேர்ந்து பணியாற்றுவோம் என்றார்.